அன்புச்செழியன் மீது மேலும் 2 முன்னணி தயாரிப்பாளர்கள் போலீசில் புகார்
சென்னை : முன்னணி தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் ஆகியோர் ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக் குமார்.

இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சிலர் அன்புச்செழியன் மீது குற்றம் சாட்டினர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினர்.
இதுதொடர்பாக, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனைத் தேடி வருகின்றனர். அவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக இருக்கலாம் எனக் கருதி அங்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. சீனு ராமசாமி, சுந்தர் சி, விஜய் ஆண்டனி, மனோபாலா, தேவயானி உள்ளிட்டோர் அன்புச்செழியன் நியாயமானவர் என அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சசிகுமாரிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீர் திருப்பமாக, முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் ஆகியோர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











