கூட்டத்தை கட்டுப்படுத்த முடியல.. இனி ட்ரேட் சென்டரில்தான் விழாக்கள்!- தயாரிப்பாளர்கள்
சென்னை: கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை இனி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
தமிழ் சினிமா உலகில் வாரத்துக்கு நான்கு இசை வெளியீட்டு விழாக்கள் நடக்கின்றன.

பொதுவாக பிரசாத் லேப் தியேட்டரில்தான் அதிக முறை இந்த விழாக்கள் நடக்கும். சில நேரங்களில் ஃபோர் பிரேம்ஸ் அல்லது ஆர்கேவி எனப்படும் விஜயா கார்டன் தியேட்டரில் நடக்கும். எப்போதாவது சத்யம் திரையரங்கிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடக்கும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்த இடத்தில் நிகழ்ச்சியை வைத்தாலும் நிற்கக் கூட இடமின்றி கூட்டம் கூடிவிடுவது வழக்கம். பொதுவாக இந்த நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்கள்தான் முக்கிய விருந்தினர்கள். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குநர்களின் உறவினர்கள், நண்பர்கள் கூட்டம்தான் அதிகமாக வரவழைக்கப்படுகிறது. ஓரளவு வளர்ந்த நடிகர்கள் தங்கள் ரசிகர் மன்றத்து ஆட்களிடம் வந்து 'கெத்து' காட்டுங்க என உத்தரவு போட்டுவிட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி கமுக்கம் காட்டுவார்கள்.
பெரிய நடிகர்கள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். திரையுலகினரே திரளாக வந்து கலந்து கொள்வார்கள்.
இப்படி கூட்டம் கூடுவதால் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு, பலரும் கடும் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மீடியா. தொலைக்காட்சி, இணையதளங்கள், பண்பலை, நாள் - வார - மாத பத்திரிகைகள் நிருபர்கள், கேமராமேன்கள், உதவியாளர்கள் எல்லாரையும் சேர்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு 250 பேர் வரை வருகிறார்கள்.
வருகிற விருந்தினர்களும் ரசிகர்களும் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ள, நிகழ்ச்சியை படமெடுக்க, செய்தி சேகரிக்க மீடியாக்காரர்கள் உள்ளே நுழைய முடியாத சூழல் வந்துவிட்டது.
இந்த நிலையைக் கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் புதிய முடிவெடுத்துள்ளார்களாம்.
இனி ஓரளவு பெரிய, மற்றும் டாப் நடிகர்களின் படங்களின் இசை வெளியீடு, ட்ரைலர் வெளியீடு, பட அறிமுக விழாக்களை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையம் மிக பிரமாண்டமானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்தாலும் தாக்குப் பிடிக்கக் கூடியது என்பதால், இது சரியாக முடிவுதான் என சக தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











