Project K - அதகளம் செய்யும் புராஜெக்ட் கே.. காமிக் கானுக்கு செல்லும் முதல் இந்திய படம்
ஹைதராபாத்: Project K (புராஜெக்ட் கே) காமிக் கானில் பங்கேற்கவிருக்கும் முதல் இந்திய படம் என்ற பெருமையை புராஜெக்ட் கே பெற்றிருக்கிறது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் மழையை பொழிந்ததால் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தார். இந்தச் சூழலில் அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் பிரபல்யத்தை பெற்றுத்தரும் என நினைத்த பிரபாஸுக்கு ஆதிபுருஷ் பலத்த அடியையே கொடுத்தது. இதனால் மீண்டும் ஒரு மெகா ஹிட் படத்தில் நடித்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்.

சலார்: இதனையடுத்து கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீலின் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ். இதில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படமும் பான் இந்தியா படமாக செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதன் டீசர் நேற்று அதிகாலை 5.12 மணிக்கு வெளியானது. டீசருக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்து இதுவரை 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
புராஜெக்ட் கே: சலார் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பைவிடவும் பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான புராஜெக்ட் கே என்ற படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கவிருக்கும் இப்படமானது சைன்ஸ் பிக்ஷன் படமாக பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி போன்ற உச்ச நட்சத்திரங்கள் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கின்றனர்.
புராஜெட்டில் கமலும்: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தில் கமல் ஹாசனும் கமிட்டாகியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் மொத்தம் 25 நாட்கள் கால்ஷீட்டுக்கு கமல் ஹாசன் 130 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
காமிக் கானில் புராஜெக்ட் கே: இந்நிலையில் புராஜெக்ட் கே படம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதிவரை அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெறவிருக்கும் காமிக் கான் நிகழ்ச்சியில் புராஜெக்ட் கே படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
கமல் ஹாசன், நாக் அஸ்வின், பிரபாஸ் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மேலும், அந்த நிகழ்ச்சியில் வைத்து புராஜெக்ட் கே படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவைகள் வெளியிடப்படலாம் என்றும்; ரசிகர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதில் அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காமிக் கான் என்றால் என்ன?: அமெரிக்காவின் சான் டியாகோவில் 1970ஆம் ஆண்டு காமிக் கான் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்வில் சூப்பர் மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் வேடம் அணிந்து ரசிகர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர். இதனையடுத்து அந்த நிகழ்வை பயன்படுத்த ஆரம்பித்த ஹாலிவுட் திரையுலகினர் தங்களது படங்களுக்கான விளம்பரத்தையோ, ப்ரோமோஷனையோ அதில் செய்ய ஆரம்பித்தனர்.
அப்போதிருந்து அந்த நிகழ்வு உலக புகழ்பெற்றதாக மாறிவிட்டது. அமெரிக்காவில் நடந்த காமிக் கான் போல் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த இந்திய காமிக் கானில் பாகுபலி படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











