இலங்கையில் ரஜினி, கமல், விஜய், சரத்குமார் படங்களை திரையிட எதிர்ப்பு
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரை நட்சத்திரங்கள் இருப்பதால் இலங்கையில் ரஜினி, கமல், சரத்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதலில் சென்னையில் இயக்குனர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து நடிகர், நடிகைகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரத்குமார், அஜீத், விஷால், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும், தன்ஷிகா, மோனிகா, தேவயாணி உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டனர்.
இதனால் இலங்கையில் செயல்படும் சில அமைப்புகள் அதிலும் குறிப்பாக ராவணா சக்தி என்ற அமைப்பு அங்கு முக்கிய தமிழ் நடிகர்களின் படங்களைதிரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று அந்த அமைப்பு இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ரஜினி, கமல் படங்களுக்கு எதிர்ப்பு
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ரஜினிகாந்த், கமல் ஹாசனின் படங்களை இலங்கையில் திரையிடக் கூடாது என்று ராவணா சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விஜய், சரத்குமார் படங்களும் வேண்டாம்
விஜய், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையும் இலங்கையில் திரையிட ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் நோக்கம்
ராவணா சக்தி அரசியல் ரீதியான பிரச்சாரம் செய்யத் தான் தமிழ் படங்களை இலங்கையில் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











