இப்படியா இறுதி ஊர்வல காட்சிய எடுப்பீங்க.. நடிகர் கதிரின் படத்திற்கு எதிராக கொந்தளித்த மக்கள்!
சென்னை: அதிகளவில் மக்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திய படத்திற்கு எதிராக சென்னையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு தீவிரமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமலும் மருந்துகள் கிடைக்காமலும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் பல படங்களின் படப்பிடிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தம்
முன்னணி நடிகர்களான விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றோரின் நடிப்பில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கதிர் நடித்து வரும் படத்தில் பெருமளவு கூட்டத்தை சேர்த்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஜடா திரைப்படம்
விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் கதிர். கடைசியாக இவரது நடிப்பில் ஜடா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை குமரன் இயக்கியிருந்தார்.

இறுதி ஊர்வல காட்சி
இந்நிலையில் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள கதிர், பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் கதிர் நடித்து வரும் படம் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அதிகளவு மக்களை திரட்டி பிரமாண்டமாய் இறுதி ஊர்வல காட்சியை எடுத்துள்ளனர்.

ஆபத்தானது..
இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் அதிக அளவு மக்களை கூட்டுவது ஆபத்தானது என்றும் இது அச்சுறுத்தலாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

படக்குழுவுக்கு அபராதம்
மேலும் படக்குழுவினர் மீது அப்பகுதி மக்கள் போலீஸிலும் புகார் அளித்துள்ளனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்திக்கு ஜோடியாக
ஆனால் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ அல்லது இயக்குநர் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. அடுத்ததாக நடிகர் கதிர், ஆனந்தியுடன் இணைந்து த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











