புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்‘ ... 4,000 திரையரங்குகளில் மிரட்டலாக ரிலீசாகிறது !
பெங்களுர் : மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த ஜேம்ஸ் படம் 4 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.
இப்படத்தில் புனித் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருடன் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜேம்ஸ் திரைப்படம் கன்னட திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள புனித்தின் ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில்காண காத்திருக்கிறார்கள்.

புனித் ராஜ்குமார்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்தது கன்னட திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மக்கள் மனதில் இடம்
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகனாக இருந்ததால் சினிமாவில் நுழைவதற்கு அவர் பெரிய அளவில் மெனக்கெடவில்லை என்றாலும் தன் உழைப்பினாலும் தன் அர்ப்பணிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் சமுதாயத்தின் அக்கறை கொண்டு இவர் செய்த பல நல்ல விஷயங்கள் மக்களிடையே அவருக்கு பெரிய அளவிற்கு மரியாதையை பெற்றுத்தந்தது

முன்னணி நடிகர்கள்
ஜேம்ஸ் திரைப்படத்தில், புனிதத்தின் மூத்த சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சேத்தன் குமார் இயக்க, கிஷோர் பதிகொண்டா தயாரித்துள்ளார். புனிதத்தின் மூத்த சகோதரர் சிவராஜ்குமார் தனது தம்பிக்காக டப்பிங் பேசியிருக்கிறார்.

பிறந்தநாளில் ரிலீஸ்
புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ந் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஜேம்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கர்நாடகாவில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரையரங்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது


Click it and Unblock the Notifications











