புனீத் ராஜ்குமாரின் கடைசி படம் ஜேம்ஸ்... வெளியானது கலக்கல் வீடியோ பாடல்
பெங்களூரு : மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள படம் ஜேம்ஸ்.
இந்தப் படம் மார்ச் 17ம் தேதி அவரது பிறந்தநாளன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கலங்கடித்து வருகிறது.

கன்னட உலகின் சூப்பர்ஸ்டார்
நடிகர் புனீத் ராஜ்குமார், கன்னடத்தில் சூப்பர்ஸ்டாராக விளங்கியவர். ஏராளமான ரசிகர்களை கொண்டவர். நடிப்பில் மட்டுமின்றி சமூக பணிகளிலும் சூப்பர்ஸ்டாராக விளங்கியவர். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

கடைசி படம் ஜேம்ஸ்
உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக நடித்துள்ள படம் ஜேம்ஸ் வரும் 17ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்
இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. புனீத்திற்கு அவரது அண்ணன் சிவராஜ்குமார் தான் டப்பிங் பேசியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 11ம் தேதி வெளியாகி ரசிகர்களை கண்கலங்க செய்துள்ளது. டீசரில் அசத்தலான ஆக்ஷன் காட்சிகளில் புனீத் காணப்பட்டார்.

லிரிக் வீடியோ பாடல் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் லிரிக் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ட்ரேட்மார்க் என்ற இந்தப் பாடல் சிறப்பான மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் காணப்படுகிறது. இந்தப் பாடலில் புனீத் மானிட்டர் பார்ப்பது, சக கலைஞர்களுடன் பேசுவது, சிரிப்பது என காணப்படுகிறார்.

சமூக அக்கறை
புனீத் ராஜ்குமார் நடிப்பில் மட்டுமின்றி சமூக அக்கறையிலும் சூப்பர்ஸ்டாராகவே விளங்கியவர். ஏராளமான ஏழை குழந்தைகளுக்கு கல்வியை இலவசமாக தந்தவர். முதியோர்களுக்கான இருப்பிடம் உள்ளிட்டவற்றை சிறப்பாக இலவசமாக செய்து வந்தவர். அவரது இழப்பு திரையுலகில் மட்டுமின்றி சமூக வெளியிலும் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











