Pushpa 2 Box Office: அடேங்கப்பா 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?.. வேட்டையாடும் புஷ்பா 2
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பான் இந்தியா அளவில் வெளியானது. இந்தப் படத்தின் அறிவிப்பின்போதே இதன் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படம் குறையில்லாமல் விருந்து வைத்திருக்கிறது. பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கும் சூழலில்; வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்திவருகிறது. தற்போது நான்கு நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் ஐகான் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். டோலிவுட்டில் மட்டும் ஃபேமஸாக இருந்த அவரை இந்திய அளவில் அடையாளப்படுத்திய படம் என்றால் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் வசூலில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை தொட்டது படம்.

புஷ்பா 2: புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியை அடுத்து இரண்டாவது பாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் சக்கைப்போடு போட்டதன் காரணமாக இந்த இரண்டாவது பாகத்துக்கும் ரசிகர்களிடம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதேசமயம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்து சில விரும்பத்தகாத தகவல்கள் வெளியாகின. அதாவது சுகுமாருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பிரச்னை; படத்தை முழுவதுமாக ஷூட் செய்துவிட்டு அது திருப்தியளிக்காததால் மீண்டும் ஷூட் செய்தார்கள் என்றெல்லாம் தகவல்கள் வட்டமடித்தன.
வெளியான புஷ்பா 2: ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஏற்கனவே படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தத்ன் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். முதல் நாளிலேயே படம் நூறு கோடி ரூபாயை தாண்டி உலகளவில் வசூல் செய்தது. இதனால் கண்டிப்பாக இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கப்போவது உறுதி என்றும் அடித்து கூறினார்கள் அல்லுவின் ரசிகர்கள்.
உச்சக்கட்ட வசூல்: இந்நிலையில் புஷ்பா 2 படம் வெளியாகி நான்கு நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில்; உலகளவில் அந்தப் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தப் படம் இதுவரை 829 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனைப் பார்த்த இந்திய திரையுலகம் உச்சக்கட்ட ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











