கூட்டத்தில் சிக்கி ரசிகை உயிரிழப்பு.. 20 நாட்களுக்கு பிறகு புஷ்பா 2 படக்குழு நிதி உதவி!
சென்னை: 'புஷ்பா 2’ படத்தை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்த நிலையில், தற்போது, ரேவதியின் குடும்பத்திற்கு படக்குழு ₹2 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த 'புஷ்பா-2’ படம், டிசம்பர் 4ந் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஸ்பெஷல் காட்சியாக திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதில், ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

கூட்ட நெரிசல்: இதுதொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அவரை நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின் உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால், சிறையில் இருந்து வெளியே வந்தார். அந்த விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று 3 ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டு புஷ்பா2 படத்தில் நடித்தேன். இதனால், படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்க திரையரங்கு சென்றேன்.
நிதி உதவி: கடந்த 20 ஆண்டுகளாக 30 சினிமா வெளியானபோது. முதல் நாளே அதே தியேட்டரில் சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விபத்து நடந்துள்ளது.இந்த நெரிசலில் சிக்கி, ஒரு ரசிகை இறந்ததும் அவரது மகன் கோமா நிலைக்கு சென்றதும் எனக்கு மறுநாள் காலை தான் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என்று பேசி இருந்தார். இந்த விவகாரம் தொடர்ந்து புகைந்து கொண்டே இருக்கும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ரேவதியின் குடும்பத்திற்கு படக்குழு ₹2 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் ₹1 கோடியும், சுகுமார் ₹50 லட்சமும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ₹50 லட்சமும் கொடுத்தனர். மேலும், கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் மகன் ஸ்ரீதேஜாவுக்கு தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications











