நடுராத்திரியில் காவு வாங்கிய புஷ்பா 2.. கூட்ட நெரிசலில் பெண் பலி.. பரிதாப நிலையில் ஐசியூவில் குழந்தை
ஹைதராபாத்: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஒரே நாளில் மோதின. இதில், அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவில் வெளியானது. அந்த படத்தைக் காண ஆட்டம் பாட்டத்துடன் லாரியில் வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதிகாலை சிறப்புக் காட்சிக்கு கூட அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அதிரடி முடிவெடுத்தது.
தமிழ்நாட்டில் புதிய படங்கள் காலை 9 மணிக்குத்தான் அதுவும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்தால் தான் திரையிடப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற மாநிலங்களில் இன்னமும் அதிகாலை காட்சிகளும் அக்கப்போர்களும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்த பெண்மணியின் குழந்தை பரிதாபகரமான நிலையில், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பல இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
காவு வாங்கிய புஷ்பா 2 ப்ரீமியர்: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுனையும் புஷ்பா 2வையும் ஆசையுடன் பார்க்க தில்சுக் நகரில் இருந்து வந்த ரேவதி எனும் பெண் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீரியஸ் கண்டிஷனில் குழந்தை: ரேவதியை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிபிஆர் எல்லாம் செய்து பார்த்தும் அவர் பிழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய குழந்தையும் கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில், சீரியஸான நிலையில், மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவு நேரத்தில் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதும், ரசிகர்களுடன் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜுன் படம் பார்த்தது எல்லாம் ரொம்பவே தவறான விஷயம் என சமூக ஆர்வலர்கள் அல்லு அர்ஜுனை கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











