புஷ்பா 2.. பெண் உயிரிழப்பு எதிரொலி.. தெலங்கானா அரசு எடுத்த அதிரடி முடிவு
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. அதேசமயம் முதல் நாளில் கிட்டத்தட்ட 170 கோடி ரூபாய்வரை படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தெலங்கானா அரசு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் அடையாளத்தை மாற்றி வைத்த படங்களில் புஷ்பா படத்துக்கு முக்கிய பங்கு உண்டு. மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கியிருந்தார். வழக்கமான மசாலா சினிமாவாக இருந்தாலும் இசை, மேக்கிங் என அனைத்து ஏரியாவும் ஒழுங்காக கவர் ஆகியிருந்ததால் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முக்கியமாக வசூலில் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியது.

அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டார்: மேலும் அல்லு அர்ஜுனையும் அந்தப் படம் இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது. சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும்படி லீட் வைத்து முதல் பாகத்தை முடித்திருந்தார் இயக்குநர். அதனையடுத்து புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்த நிலையில் படமானது நேற்று பான் இந்தியா அளவில் வெளியானது. தியேட்டர்கள் அனைத்திலும் கூட்டம் அலைமோதியது. அதனை வைத்தே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை புரிந்துகொள்ளலாம்.
கலவையான விமர்சனம்: படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் நேற்று தியேட்டருக்கு படையெடுத்தார்கள். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது அமோக ஆதரவை அளித்தார்கள். இருந்தாலும் படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக முதல் நாளில் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இருந்தாலும் படம் சுமாருக்கும் மேலே என்ற ரிசல்ட்டை பெற்றிருக்கிறது.
பெண் உயிரிழப்பு: இதற்கிடையே புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்காக ரேவதி என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் இருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு சென்றார். அப்போது கூட்டம் அளவுக்கு மீறி இருந்தது. அதன் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு எடுத்த அதிரடி முடிவு: இந்நிலையில் ரேவதி உயிரிழப்பை தொடர்ந்து தெலங்கானா அரசு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி இனிமேல் தெலங்கானாவில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அறிவித்திருக்கிறது. அதேபோல் அதிகாலை காட்சிக்கும் அனுமதி கிடையாது என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. அம்மாநில அரசின் முடிவைத் தொடர்ந்து இனிமேல் அங்கு வரும் எந்தப் படங்களும் புஷ்பா 2வின் வசூலை முறியடிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது என்ற கருத்தும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











