தேவிஸ்ரீ பிரசாத்துடன் என்ன பிரச்னை?.. மேடையில் ஏன் அப்படி பேசினார்?.. புஷ்பா 2 தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் திரைப்படம் புஷ்பா 2. இந்தப் படம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தயாரிப்பு தரப்புக்கும், அவருக்கும் என்ன பிரச்னை என்று பலரும் கேட்க ஆரம்பித்தார்கள்.
சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும் அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. இதனையடுத்து அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியிருக்கிறது. டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸே பல கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாக கூறப்படும் சூழலில் வெளிநாடுகளில் படத்தின் டிக்கெட் புக்கிங்கும் மிகச்சிறப்பாக நடந்துவருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் ஈவெண்ட்: சூழல் இப்படி இருக்க படத்தில் இடம்பெற்றிருக்கும் கிஸ்ஸிக் என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் சுகுமார் தவிர்த்து படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் புஷ்பா 2 தயாரிப்பாளர் ரவிசங்கரிடம் மேடையில் பேசிய விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில், "நான் நேரத்துக்கு பாடல்கள் கொடுக்கவில்லை; பின்னணி இசையை கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் தொடர்ந்து என் மீது குற்றஞ்சாட்டுகிறார்.
கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்: இப்போதுகூட இந்த நிகழ்ச்சிக்கு நேரத்துக்கு வரவில்லை என்று சொல்வீர்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள்தான் என்னை உள்ளே விடவில்லை. அதனால்தான் லேட்டாக வந்தேன். தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான க்ரெடிட்டாக இருந்தாலும் சரி அதை நாம்தான் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கேட்கவில்லை என்றால் யாரும் நமக்கு எதையும் கொடுக்கமாட்டார்கள். நன்மதிப்பையும் கொடுக்கமாட்டார்கள்.
அன்பு இருக்கிறது: நீங்கள் (தயாரிப்பாளர்) என் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். என்னை விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பவை விடவும், புகார்கள்தான் அதிகம் என்பதும் எனக்கு தெரியும்" என்று குறிப்பிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன தேவிஸ்ரீ பிரசாத் இப்படி ஓபனாக பேசிவிட்டார் என்று அதிர்ச்சியடைந்தார்கள். அதுமட்டுமின்றி புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையை தேவிஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை. அவர் நீக்கப்பட்டுவிட்டார். அதேபோல் குட் பேட் அக்லி படத்திலிருந்தும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரை நீக்கிவிட்டது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் அது என்று பலரும் பேசினார்கள்.
ரவிசங்கர் விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சங்கர், "தேவிஸ்ரீ பிரசாத் அப்படி சொன்னதில் எந்தவிதமான தவறும் இல்லை. அவர் ஒரு சினிமா வசனத்தைப் போல்தான் பேசினார். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறோம். இசை துறையில் அவர் இருக்கும்வரை எங்கள் படங்களுக்கு அவர் இசையமைப்பார். நாங்களும் அவருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











