புஷ்பா 3 வருதாம்.. புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் நடந்த திடீர் மாற்றம்.. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஹேப்பி!
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களையும் புஷ்பா திரைப்படம் கவர்ந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் பிரம்மாண்டமாக சில ஆண்டுகளாக உருவாக்கி வருகிறார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், புஷ்பா 3 திரைப்படமும் விரைவில் உருவாகும் என்கிற அப்டேட்டையும் படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியிருப்பது அல்லு அர்ஜுன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
புஷ்பா திரைப்படம்: கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்பா திரைப்படம் வெளியானது. செம்மரக்கட்டை கடத்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த படத்தில் புஷ்பராஜாக டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து அசத்தினார். படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாஸில் மொட்டைத் தலையுடன் வந்து மிரட்டி இருந்தார். ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவரும் வகையில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி பொங்க நடனமாடி ஸ்கோர் செய்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அல்லு அர்ஜுன் உடனிருந்து சமந்தா போட்ட குத்தாட்டம் ராஷ்மிகா மந்தனாவை விட அவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுத் தந்தது.
அல்லு அர்ஜுன் - சுகுமார் பிரச்சனை: புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிவரை அந்த படம் இழுத்து அடிக்கப்பட்டதற்கு காரணம் அல்லு அர்ஜுன் மற்றும் படத்தின் இயக்குநர் சுகுமார் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தான் என ஏகப்பட்ட தகவல்கள் பரவின. படத்தை முடிக்காமல் சுகுமார் ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு சென்றதாகவும், சுகுமார் வந்தவுடன் அல்லு அர்ஜுன் ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி புஷ்பா 2 திரைப்படமே வெளியாகுமா என்கிற கேள்வியை எழுப்பியது.

புஷ்பா 3 வரும்: புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதியை வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினத்தில் படத்தை வெளியிட்டால், தொடர்ந்து 4 நாட்கள் வசூல் வேட்டை நடத்த படக்குழு திட்டம். மேலும், புஷ்பா 3 திரைப்படமும் விரைவில் வரும் என்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர். புஷ்பா 3 திரைப்படத்துக்கான லீட் புஷ்பா 2வில் இடம்பெறுமா என்றும் அல்லு அர்ஜுன் அப்போ இந்த படத்தில் சாகமாட்டாரா என்றும் ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
500 கோடி பட்ஜெட்: இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்கள் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 500 கோடி வசூல் செய்யவே மூச்சு திணறி வரும் நிலையில், கல்கி 2898 ஏடி படத்தைப் போலவே இந்த படமும் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் 900 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தளவுக்கு புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஷ்ரத்தா கபூர் குத்தாட்டம்: புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடியது போல இந்தப் படத்தில் திரிப்தி திம்ரி நடனமாட போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், லேட்டஸ்ட்டாக ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்களை கவரும் விதமாக நடிகை ஷ்ரத்தா கபூர் கவர்ச்சி குத்தாட்டம் போடவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. விரைவில் புஷ்பா 2 பாடல்கள் குறித்த அப்டேட்கள், இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











