ப்பா... முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் பெத்த தொகையை குவித்த புஷ்பா திரைப்படம்... எவ்ளோன்னு பாருங்க!
சென்னை: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கண்டனமும் எதிர்ப்பும்
இந்தப் படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ஐட்டம் பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆண்களை தவறாக சித்தரித்து பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் இந்த பாடலுக்கு எதிராக ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த பாடலுக்கு கண்டனமும் எதிர்ப்பும் எழுந்தது.

முதல் நாளில் ஹவுஸ்ஃபுல்
இந்நிலையில் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே புஷ்பா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார் அல்லு அர்ஜூன். ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் முதல் நாளில் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளது.

ரூ. 40 கோடி வசூல்
படமும் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளான நேற்று நாடு முழுவதும் புஷ்பா திரைப்படம் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை முறியடிப்பு
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆல வைகுந்தபுரமுலோ படத்தின் முதல் நாளில் 36.83 கோடி ரூபாய் வசூலை குவித்தது. இதுவே அல்லு அர்ஜூன் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை குவித்த படமாக இருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை புஷ்பா திரைப்படம் முறியடித்து அல்லு அர்ஜூன் கேரியரில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

மேலும் அதிகரிக்கும்
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் புஷ்பா திரைப்படம் 30 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதேபோல் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 5 கோடி ரூபாய் வரை வசூலை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











