மாட்டிக்கிட்ட பங்கு.. அம்பலமானது பிவிஆர் தியேட்டரின் மோசடி.. அதிரடியாக அபராதம் விதித்த நீதிமன்றம்!
பெங்களூர்: சுமார் 20 நிமிடங்கள் தியேட்டரில் படம் போடாமல் நேரத்தை வீணடித்து விளம்பரங்களாக போட்டு டார்ச்சர் செய்வதாக பிவிஆர் திரையரங்கம் மீது பெங்களுருவை சேர்ந்த ரசிகர் ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பிவிஆர் தியேட்டருக்கு அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் சமூக வலைதளங்களில் கிளப்பி இருக்கிறது.
மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் என்றாலே டிக்கெட் விலை முதல் பாப்கார்ன், பார்க்கிங் என அனைத்து விலையும் அவர்கள் வைத்தது போல தனி ராஜாங்கமாகவே செயல்பட்டு வருகிறது. 500 ரூபாய் கொடுத்து பாப் கார்ன் வாங்க வேண்டாம் என்பதற்காக பலரும் ஓடிடியில் குடும்பமாகவே படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

எப்போது படம் போட்டாலும் குறைந்தது 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் தாமதமாகவே படங்களை பிவிஆர் தியேட்டர்கள் திரையிட்டு வருவதாக தற்போது பலரும் சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
மன உளைச்சல் என புகார்: பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் செயல்பட்டு வரும் பிவிஆர் திரையரங்கில் கடந்த 2023ம் ஆண்டு விக்கி கவுஷல் நடிப்பில் வெளியான சாம் பகதூர் படத்தை பார்க்க வந்த ரசிகர் சுமார் 20 நிமிடங்கள் விளம்பரம் போட்டு படத்தை தாமதமாக திரையிட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் இதுவொரு பெரிய மோசடி என்றும் விளம்பர நோக்கத்திற்காக பிவிஆர் தியேட்டர் இப்படி செய்ததாக அவர் தொடுத்த வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் அபராதம்: இந்த வழக்கின் தீர்ப்பில் பிவிஆர் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்ந்தவரின் மன உளைச்சலுக்காக அவருக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்கவும் அதில் 8 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுகளுக்காகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏகப்பட்ட மோசடி?: 99 ரூபாய்க்கு தின்பண்டங்களை திங்கள் முதல் வியாழன் வரை வாங்கிக் கொள்ளலாம் என சில ஆஃபர்களை பிவிஆர் நிறுவனம் அறிவித்தாலும், பல தியேட்டர்களில் அந்த நடைமுறையை பின்பற்றப்படவில்லை என்றும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், 60 ரூபாய்க்கு விற்கப்படுவதாக சொல்லப்படும் முன் வரிசை சீட்டுகளை ஆன்லைனில் முடக்கி வைத்துவிட்டு தியேட்டரில் படம் போடும் போது காம்போ டிக்கெட்டுகளாக 210 ரூபாய்க்கு விற்று வருவதாகவும் நெட்டிசன்கள் பிவிஆர் தியேட்டர்களில் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். பெங்களூர் வழக்கின் தீர்ப்பை பார்த்த ரசிகர்கள் நாங்களும் வழக்கு தொடுக்க போகிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











