R.B. சௌத்ரி மறைவு.. ஓடோடி வந்து அஞ்சலி செலுத்திய MS பாஸ்கர், சித்தார்த்
சென்னை: தென்னிந்திய திரையுலகின் மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் (Super Good Films) ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 'வெற்றி ஃபார்முலா' தெரிந்த தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஆர்.பி. சௌத்ரி. அவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது தனது 100-வது பிரமாண்ட திரைப்படத்தை தயாரித்து வந்தது. அந்தப் படத்தின் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாகவும், மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்பங்களின் ஃபேவரிட் தயாரிப்பாளர்: "சூப்பர் குட் ஃபிலிம்ஸ்" என்றாலே அது குடும்பங்கள் கொண்டாடும் 'பீல் குட்' (Feel Good) படங்களாகத்தான் இருக்கும் என்ற நற்பெயரை திரையுலகில் உருவாக்கி வைத்திருந்தார் சௌத்ரி. சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, சூரியவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஆனந்தம் எனத் தமிழ் சினிமாவின் பல காலத்தால் அழியாத காவியங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.

திரையுலகம் அஞ்சலி: அவரது மறைவுச் செய்தியை தொடர்ந்து, அவரது உடல் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் எம்.எஸ். பாஸ்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
சோகத்தில் மகன்கள்: ஆர்.பி. சௌத்ரியின் மகன்களான நடிகர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோருக்கு இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, நடிகர் ஜீவா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், தந்தையின் இந்தத் திடீர் மறைவு அவரது குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. ஒரு சகாப்தமாக திகழ்ந்த ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, தென்னிந்திய சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு என பலரும் தெரிவித்து வருகிறார்கள். பலருக்கும் திரை உலகில் வாழ்க்கை கொடுத்தவர். சினிமாவின் ஒவ்வொரு நகர்வையும் தெரிந்து கொண்டவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இனிமேல் தான் கூடுதலாக தைரியமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ்க்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications