இந்த வயதில் அந்தப் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்தால்.. அப்படித்தான் இருக்கும்.. மாதவன் கிண்டல்!
சென்னை: இந்த வயதில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது யானைக்கு உள்ளாடை அணிவது போல இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் மாதவன்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தப் படம், மின்னலே.
இதுதான் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு முதல் படம். இதில் ரீமா சென், அப்பாஸ், விவேக் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தி ரீமேக்
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் தமிழில் கவனிக்கப்பட்டதை அடுத்து, இதை அப்படியே இந்தியில் ரீமேக் செய்தார், கவுதம் வாசுதேவ் மேனன். இந்தியில் இதற்கு 'ரெஹ்னா ஹை தேர்ரே தில் மே' (Rehnaa Hai Terre Dil Mein) என்று டைட்டில் வைத்திருந்தனர். இந்தியிலும் ஹீரோவாக மாதவன் நடித்தார்.

வெற்றி பெறவில்லை
ஹீரோயினாக தியா மிர்ஸா அறிமுகமாகி இருந்தார். மற்றும் சைஃப் அலிகான், அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் வீடியோ பேட்டியிலும் சமூக வலைத்தளங்களின் நேரலையில் பேசி வருகின்றனர்.

அடுத்த பாகம்
அப்போது சிலர் தங்கள் படங்களின் அடுத்த பாகம் பற்றி பேசி வருகின்றனர். இந்நிலையில் மின்னலே இந்தி ரீமேக்கான 'ரெஹ்னா ஹை தேர்ரே தில் மே' படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின. மாதவனும் தியா மிர்ஷாவும் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு கருத்து ஏதும் சொல்லாமல் இருந்த மாதவன் இப்போது கூறியுள்ளார்.

யானைக்கு உள்ளாடை
அவர் இதுபற்றி கூறும்போது, 'அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய வதந்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அதுபற்றி தெரியாது. எனக்கும் தியாவுக்கும் வயதுக்கேற்ற ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த வயதில் நான், மாதவ் சாஸ்திரி (மின்னலே இந்தி ரீமேக்கில் மாதவன் பெயர்) கேரக்டரில் நடிப்பது யானைக்கு உள்ளாடை அணிவது போல இருக்கும் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

வித்தியாசம் இருக்காது
இதை ரசித்துள்ள பலர், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன்ர். 'முடியாதது ஒன்றுமில்லை. முகத் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. நீங்கள் புத்திசாலித்தனமான நடிகர், நல்ல ஸ்கிரிப்ட், தியாவுடனான உங்கள் கெமிஸ்ட்ரி.. அவ்வளவு போதும் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். நீங்களும் தியாவும் மட்டுமே அந்த படத்தின் அடுத்தப் பாகத்தில் நடிக்க முடியும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











