விஜய் ஊட்டியில் மீண்டும் கை கட்டி நிற்காமல் இருந்தால் சரி.. பெரம்பூர் தொகுதியில் கிழித்தெடுத்த ரீல் அப்பா
சென்னை: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் வாழ்த்தியவர்களில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரும் ஒருவர். ஆனால் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் திருப்திகரமாகவும் ஒரு அரசியல் இலக்கணத்துடனும் இல்லை என்று கூறி காட்டமாக விமர்சிக்கத் தொடங்கினார். அப்படி இருக்கையில் தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது, நடிகர் விஜய்யை மிகவும் காட்டமாக விமர்சித்தார்.
குறிப்பாக, " நாங்கள் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்ட 1996 ஆண்டு முதல் மக்களைச் சந்தித்து வருகிறோம்; ஒரு அசம்பாவிதம் கூட நடந்ததில்லை. ஆனால், விஜய்யின் தவெக கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு, அவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிக்கிறார். இதைவிட ஈனமான செயல் இருக்குமா? துக்கம் விசாரிக்க வந்த வந்த இடத்தில் செல்பி எடுக்க கூடாது என்று ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாதவர், எதிர் காலத்தில் எப்படி தலைவராக முடியும்?

இலவசத்தை எதிர்ப்பேன் என்று சொன்ன விஜய், இப்போது கார், பைக் கொடுப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ரூபாய் 10 லட்சம் கோடி கடனைச் சீர் செய்ய விஜய்யிடம் என்ன திட்டம் இருக்கிறது?
தேவையில்லாமல்: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதற்கு பாஜகவை குற்றம் சொல்வது அபத்தமாக உள்ளது. ஒரு படத்தின் ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளர் வசமே இருக்கும் போது, இதில் எப்படி சிபிஐ-க்கும் எல்.முருகன் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று தவெகவினர் கூறுகிறார்கள்? ஜன நாயகன் லீக் ஆன விஷயம் தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை வந்த போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொன்னவன் இந்த சரத்குமார்.

ஊட்டியில் மீண்டும்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெல்வார் என்பது விஜய்க்கு தெரியும், அதனால் தான் எங்களையும் எங்கள் முதலமைச்சரையும் அவர் விமர்சிக்காமல் இருக்க முக்கிய காரணம். வம்பில் சிக்க வேண்டாம் என்பதற்காக பேசாமல் இருக்கலாம். மீண்டும் ஊட்டியில் கைகட்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் போல" என்று பிரசாரத்தில் விஜய்யை மிகவும் காட்டமாக விமர்சித்தார்.
13 மார்க்: அதேபோல், பெரம்பூர் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமகவின் திலகபாமா தனது பிரசாரத்தில், " 2021ம் ஆண்டில் திமுகவிடம் ஆட்சியை கொண்டுபோய் கொடுத்துவிட்டோம். எப்படியோ அவர்கள் ஜெயித்து வந்துவிட்டார்கள். வந்தவர்கள் 505 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 13 சதவிகிதம் அதாவது வெறும் 63 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். 13 மார்க் எடுத்தால் பாஸா? ஃ பெயிலா? ஃபெயிலான இந்த அரசாங்கம் நமக்கு வேண்டுமா? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக செலவழித்து படிக்கிறோம்.

போராட்டம்: ஆனால் அரசு வேலைக்கு சென்றவர்கள் நிலை என்ன? செவிலியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், எல்லாருமே போராடி தான் உரிமைகளை வாங்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? இந்த பகுதியிலிருந்து வென்று வந்த எம்.எல்.ஏ ., எதையும் செய்யவில்லை. ஆனால் இப்போது வந்து வாக்குறுதிகளை அடுக்குகிறார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடையை அடைக்க காவல்துறையை அணுகினேன் மூடினார்கள். கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்து, 5 ஆண்டுகள் உங்களுக்காக பணியாற்றிட வாய்ப்பு தாருங்கள்" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications