எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல.. தோல்வியடைந்த ராதிகா சரத்குமாரின் மனமுடைந்த பதிவு!
சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டார்.நேற்று எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தோல்வி அடைந்த ராதிகா சரத்குமார், தனது எக்ஸ் தளத்தில், மனமுடைந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த பலர் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில், தனிக்கட்சி நடத்தி வந்த சரத்குமார், கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். இதையடுத்து,விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியும், தேமுதிக சார்வில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் பாஜக சார்பில் நடிகை ராதிகா ஆகியோர் போட்டியிட்டனர்.

மக்களவைத்தேர்தல்: ஏப்ரல், 19ந் தேதி பதிவான வாக்கு நேற்று எண்ணப்பட்டது. விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அவருக்கு 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகள், கிடைத்தது. வெறும் 4 ஆயிரத்து 379 வாக்குக்கள் வித்தியாசத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்தார். மூன்றாவது இடத்தை ராதிகா சரத்குமார் பெற்றார். அவருக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 271 வாக்குகள் கிடைத்தது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய போது விஜயபிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தோல்வி அடைந்தார்.
அனைவருக்கும் நன்றி: தேர்தலில் தோல்வி அடைந்த ராதிகா அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில், எனது அரசியல் பயணத்தில் நான் முதன்முறையாக விருதுநகர் பாராளுமன்றத் தேர்தல் 2024 - இல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டதில், எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தது போல, மக்களுக்கான எனது செயல்பாடும், சமூக பணியும், மக்கள்நல பணியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

உருக்கமான பதிவு: மற்றொரு பதிவில், தன் காதல் கணவர் சரத்குமாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, எல்லா போர்களும் ஜெயிப்பதற்காக அல்ல. சில போர்கள் இந்த உலகத்திற்கு யாரோ ஒருவர் போர்க்களத்தில் இருந்தார் என சொல்லத்தான். உங்கள் அன்புக்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











