கேரவனில் ரகசிய கேமிரா? சர்ச்சையாக்க விரும்பவில்லை.. ராதிகா சரத்குமார் விளக்கம்!
சென்னை: கேரள திரைத்துறையில் பாலியல் தொல்லை விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இதுகுறித்து,பேசிய ராதிகா சரத்குமார், மலையாள சினிமாவில் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை சிலர் வீடியோ எடுப்பதாக கூறி புயலை கிளப்பி இருந்தார்.
மூத்த நடிகையான ராதிகா இந்த மாதிரியான மோசமான சம்பவம் குறித்து இத்தனை நாள் வெளியில் சொல்லாதது ஏன் என்று டப்பிங் கலைஞர் பாக்கிய லட்சுமி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், ராதிகா உண்மையை மறைக்க பார்க்கிறார் என்றும் பலவிதமான கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், பொதிகையில் ஒளிபரப்பாகி வரும் தாயம்மா குடும்பத்தார் சீரியலின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

பாலியல் அத்துமீறல் இல்லை: இதில் பேசிய ராதிகா சரத்குமார், கேரவன் சம்பவம் குறித்து எஸ்டியில் இருந்து என்னிடம் கேட்டார்கள். ஆமாம் அப்படித்தான் நடந்தது என்று நான் சொன்னேன். ஆனால், இதுபற்றி நான் புகார் கொடுக்கவில்லை. பத்திரிக்கையில் எல்லாம், சினிமாவில் இவ்வளவு அக்கிரமம் நடக்குதா? என்று எழுதுகிறார்கள். அப்படி இல்லை, இப்போது சினிமாவில் படித்தவர்கள் வந்து இருப்பதால், அவர்களின் அணுகுமுறை மாறியிருக்கிறது. திரைப்படத் துறையில் முன்பு போல் இப்போது பாலியல் அத்துமீறல்கள் இல்லை, ஆனால், ஏதோ ஒரு இடத்தில் இதுபோன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பெயர் சொல்ல விரும்பவில்லை: ஆனால், இப்போது இந்த விஷயத்தை ஏன் சொன்னீங்க, அப்போதே சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறார்கள். அன்று நடந்த விஷயத்தைத்தான், நான் இப்போது சொன்னேன். ஆனால், அதற்கு முன் நான் என்ன செய்ய வேண்டுமோ அதைசெய்துவிட்டேன். மோகன்லால் போன் செய்து, எந்த படம் யார் என்று கேட்டார். சார், நான் பெயர் சொல்லவிரும்பவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த செட்டில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. நான் நடந்து போகும் போது, சிலர் தவறான வீடியோவை பார்த்துக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன். உடனே சம்மந்தப்பட்டவர்களை அழைத்து சத்தம் போட்டு அதை டெலிட் செய்ய சொன்னேன்.
எனக்கு இந்த பிரச்சனை முடியவேண்டும், தவறு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும் என்று தான் பேசுகிறேன். ஆனால், பத்திரிக்கையாளர்களுக்கு அது யார் படம், அந்த நடிகர் யார் என்பதை தெரிந்து கொண்டு அதை செய்தியாக்கி, சர்ச்சையாக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
தவறு செய்யும் ஆண்கள்: நான் வாழ்க்கையில் நடந்த இதுபோன்ற பிரச்சனைகளை தனி ஆளாக சந்தித்து இருக்கிறேன். சங்கடமான நேரத்தில் நான் சண்டை போடும் போது, சில நடிகர்கள் என்ன பிரச்சனை என்று கேட்பார்கள், சிலர் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்கள். இதனால், பல சந்தர்ப்பத்தில் தனியாகத்தான் போராடி இருக்கிறேன். இந்த சமுதாயம் தவறு செய்யும் ஆண்களைத்தான் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது. அதைப்பார்க்கும் போதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











