ஃபுல் பார்மில் சிம்பு.. அடுத்தது கமலுடன் இணைகிறார் - வெளியானது மாஸ் அப்டேட்
சென்னை: சிம்புவின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த கமல் ஹாசன் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் இந்திய அளவில் மெகா ஹிட்டானது. இதனால் மீண்டும் சினிமாவில் முழுமூச்சாக கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல் ஹாசன்.

நடிப்பு மட்டுமில்லை தயாரிப்பும்தான்
விக்ரம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த கமல் ஹாசன் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அதன்படி அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறது. அதேபோல், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றையும் அந்த நிறுவனம் தயாரிக்கிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் புதிய அறிவிப்பு
இந்தச் சூழலில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 56ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நேற்று அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இந்தப் படம் சிம்பு நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர்.

கமல் ஹாசனும், சிம்புவும் இணைகிறார்கள்
இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனம் தனது 56ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி அந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் தேசிங் பெரியசாமி படத்தை இயக்குகிறார். மேலும் இந்தப் படம் சிம்புவுக்கு 48ஆவது படமாகும். இந்தப் படம் குறித்த அறிவிப்பை மினி டீசரோடு வெளியிட்டிருக்கிறது ராஜ்கமல் நிறுவனம்.

ஃபுல் ஃபார்மில் இருக்கும் சிலம்பரசன்
இதற்கிடையே சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதற்கு அடுத்து அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டாக சமீபத்தில்தான் பத்து தல படத்தில் நடித்து முடித்தார். தற்போது கமல் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இப்படி சிம்பு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கமல் தயாரிப்பில் நடிப்பது குறித்து, 'கனவு நனவாகியிருக்கிறது' என சிம்பு தனது ட்விட்டர் பகக்த்தில் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்கு எழுதிய கதையில் சிம்பு?
இயக்குநர் தேசிங் பெரியசாமி இதற்கு முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற அடுத்ததாக ரஜினியை அவர் இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது சிம்புவை வைத்து அவர் படம் இயக்குவதால் ஒருவேளை ரஜினிக்கு எழுதிய கதையைத்தான் சிம்புவை வைத்து அவர் இயக்குகிறாரோ என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











