என்னை பார்த்தாலே காமக்கொடூரன்னு நினைக்கிறாங்க.. இப்படி பண்றது வன்மம்.. மகாராஜா நடிகர் வருத்தம்!
சென்னை: ராட்சசன் படத்தில் சபலம் நிறைந்த பள்ளி ஆசிரியராக நடித்த நடிகர் வினோத் சாகர் மகாராஜா படத்திலும் கிட்டத்தட்ட அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு நடிகரை அதேபோல டைப் காஸ்ட் செய்வது வன்மம் என பேசியுள்ளார்.
சினிமாவில் கொலைகாரனாக நடித்தால் நிஜ வாழ்க்கையில் கொலைகாரனாக இருக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. வில்லனாக நடித்த நம்பியார் சபரிமலைக்கு பலமுறை சென்று சீனியர் குருசாமி ஆக திகழ்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பல வில்லன் நடிகர்கள் நிஜ வாழ்வில் சோனு சூட் போல ஹீரோக்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினோத் சாகர் மலையாளத்தில் தனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அனுராக் காஷ்யப் கேங்: செல்லம் என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக மகாராஜா படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கேமியோ ரோலில் வந்து சென்றார். மகாராஜா படத்தில் அவருடைய டீமில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வினோத் சாகர் நடித்துள்ளார்.

சமைத்து சாப்பிட்டு திருடுவது: ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு அங்கே தனியாக இருக்கும் பெண்களை கட்டிப்போட்டு வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்த பின்னர், சமைத்து சாப்பிட்டு இளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிக்கும் மோசமான கதாபாத்திரத்தில் வினோத் சாகர் நடித்துள்ளார்.
ராட்சசன் படத்திலும்: 2012 ஆம் ஆண்டு வெளியான இதயம் திரையரங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வினோத் சாகர். நான், ஹரிதாஸ், முண்டாசுபட்டி, மெட்ராஸ், கத்தி, கிருமி, பிச்சைக்காரன், மாநகரம், செக்கச்சிவந்த வானம், காலா, ராட்சசன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ராட்சசன் படத்தில் பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்யும் கொடூரமான ஆசிரியராக நடித்து பலரது திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

டைப் காஸ்ட் பண்ணக்கூடாது: ஐட்டம் நடிகையாக ஒரு படத்தில் நடித்த நடிகையை அதேபோல தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைப்பது எந்த அளவுக்கு மோசமான செயலோ அதேபோல ஒரு நடிகரையும் டைப் ஆஃப் பண்ணுவது வன்மம் என ஷங்கர் சார் சொன்னார் என வினோத் சாகர் கூறியுள்ளார். இந்தியன் 2 படத்தில் மோசமான அதிகாரியாக நடித்துள்ளேன். அதனால், கேம் சேஞ்சர் படத்தில் தன்னை கமிட் பண்ணவில்லை என்றார் ஷங்கர். நல்லா நடித்தால் அடுத்தடுத்த படங்களில் வேறு விதமான கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என்றும் மலையாள சினிமாவில் அப்படித்தான் கொடுக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
மலையாள படங்கள்: நயாட்டு, சல்யூட், ஜன கன மண, சவுதி வெள்ளக்கா, காக்கிப்படா உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். எந்த படத்திலும் நெகட்டிவ் ரோல் இல்லை என்றும் கூறியுள்ளார். நித்திலன் சாமிநாதன் இந்த படத்தில் தன்னை மோசமானவராக காட்ட மாட்டார் என்றும் இது வேறு மாதிரியான ஷேட் என்றும் கூறியதால் தான் நடித்தேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











