5 பேருடன் திருமணம், 13 வயதில் மகன் என்பதெல்லாம் பொய்- நடிகை ராதா மீண்டும் பேட்டி
சென்னை: என்னுடன் படித்த நண்பர்களுடன் நான் எடுத்துக் கொண்ட படங்களைக் காட்டி எனக்கு 5 பேருடன் திருமணம் ஆகி விட்டதாகவும், 13 வயதில் குழந்தை இருப்பதாவும் பைசூல் கூறியிருப்பது வடிகட்டிய பொய் என்று நடிகை ராதா கூறினார்.
சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன் படங்களின் கதாநாயகி எஸ் ராதா, திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டு திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் என்பவருடன் தாலி கட்டாமலேயே மனைவியாக வாழ்ந்து வந்தார்.

மோசடி புகார்
6 ஆண்டுகள் கழித்து பைசூல் தன்னை ஏமாற்றி உடல் உறவு வைத்துக் கொண்டதோடு, ரூ.50 லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

தலைமறைவான பைசூல்
இதுபற்றி வடபழனி உதவி கமிஷனர் ஜெய சுப்பிரமணியன் விசாரணை நடத்தி, ராதா அளித்த வாக்கு மூலத்தையும் பதிவு செய்தார். இதை தொடர்ந்து பைசூலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவரை தேடினர். ஆனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இப்போது தலைமறைவாக உள்ளார்.

ஓய மாட்டேன்
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ராதா, பைசூலுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ராதா, பைசூலுக்கு தண்டனை வாங்கி தரும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

கருக்கலைப்பு - ஆதாரங்கள்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் குடும்பம் நடத்திய பைசூல், நான் ஒரு முறை கர்ப்பமானவுடன், பதறி துடித்து அதனை கலைத்து விடலாம் என்றார். நாம்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே, என்று கேட்ட போது, இப்போது குழந்தை வேண்டாம் என்று கூறி, கருவை கலைப்பதற்கு அவரே கையெழுத்துப் போட்டுள்ளார். இப்படி என்னுடன் பைசூல் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

நண்பர்களுடன் எடுத்த போட்டோ
நான் விமான பணிப் பெண்ணாக பயிற்சி பெற்றுள்ளேன். அப்போது எனது நண்பர்களுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோக்களைக் காட்டித்தான் நான் 5 பேரை திருமணம் செய்ததாகவும், 13 வயதில் எனக்கு மகன் இருப்பதாகவும் பொய்யான தகவல்களை அவர் பரப்பி வருகிறார்.

வீட்டை அடகு வைத்தேன்
என் நகைகளை அடகு வைத்து, நெல்லூரிலிருந்த வீட்டை விற்றுத்தான் அவருக்கு ரூ 50 லட்சம் கொடுத்தேன். நான் அவருக்கு கொடுத்த மொத்த பணம் ரூ.50 லட்சமும் எனக்கு கிடைக்க வேண்டும். சட்டப்படி பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நான் ஓயப்போவதில்லை.

பதுங்கியுள்ள இடம் தெரியும்
தன் மீது குற்றம் இல்லையென்றால் ஏன் ஓடி ஒளிய வேண்டும். பெங்களூரிலோ, கிழக்கு கடற்கரை சாலையிலோதான் அவர் பதுங்கி உள்ளார். அந்த இடங்கள் எனக்குத் தெரியும்," என்றார்.
பைசூல் மீது மீண்டும் மோசடிப் புகார் தரப் போகிறாராம் ராதா.


Click it and Unblock the Notifications











