கண்ணீரை அனுதாபமாக மாற்றி ஆதாயம் தேடவேண்டிய அவசியமில்லை.. பாக்யராஜ் சிஷ்யன்னு நிரூபித்த பார்த்திபன்
சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மறைந்தது மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவர் மறுநாள் காலையில் நிலைகுலைந்து விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது மறைவுக்குப் பின்னர் பாக்யராஜ் பித்து பிடித்தது போல, அவர் மீதான அன்பை நாள் தோறும் தனது சமூக வலைதளப் பதிவுகளில் பகிர்ந்து வருகிறார், இயக்குநர் பார்த்திபன். அவரது சமீபத்திய பதிவு பாக்யராஜின் சிஷ்யன் பார்த்திபன் என்பதை நிரூபித்தது போல உள்ளது.
பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் மறைந்துவிட்டதால், அடுத்து நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்கத் தேர்தலில் பார்த்திபன் போட்டியிட்டால் அவர் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சிலர் அவரிடத்தில் தெரிவித்தது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " பாக்யராஜ் சாருக்கு எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ஏற்கனவே அவர் நடுநிலையாக/சிறப்பாக செயல்பட்டிருந்ததால் தலைமை பதவிக்கு தகுதியானவராக இருப்பினும்,தேர்தலை சந்திக்கும் போது address தேடி வரும் stress-ஐ சமாளிக்க முடியாமல் சற்றே சிரமப் பட்டதாக கேள்விப்பட்டேன்.

"இது ஒன்றும் பொது தேர்தல் அல்ல, போட்டியின்றி கௌரவமாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் தலைமைத் தாங்குங்கள் இல்லாவிட்டால் அமைதியாக உங்கள் எழுத்தை கவனியுங்கள்" என நான் அவரிடம் கூறுவதுண்டு. அவர் மறைவிற்கு பின் என்னிடம் சிலர் அவருக்கு பதிலாக அத்தலைவர் பதவிக்கோ செயலாளர் பதவிக்கோ போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம் காரணம் தற்போது தங்கள் மீது அபார அபிப்பிராயம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்கள். நான் மென்மையாக அதை மறுத்தேன்.
என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும்.என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டேன்.வெற்றி பெறும் அணிக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
ஆகஸ்ட் 9 அன்று பாரதிராஜா சாருக்கும் பாக்யராஜ் சாருக்கும் ஒரு நினைவு உற்சவம் பிரமாண்டமாக நடத்த தமிழ் திரையுலகம் முடிவெடுத்துள்ளது. அதை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பதே என் அடுத்த தலையாய வேலை" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்து வந்தாலும், பலரும் பாக்யராஜ் சிஷ்யன் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் பார்த்திபன் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் பாக்யராஜ் மறைவுத் துயரத்தில் இருந்து மீண்டு வரவும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications