45 சவரன்! பத்மா காலை தொட்டு வணங்கிய பார்த்திபன்.. செருப்பு போட்டுவிட்டு பட்டம் சூட்டியிருக்காரே
சென்னை: சென்னை மாநகராட்சி, தி.நகர் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் பத்மா, கடந்த மாதத்தில் தான் சாலையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல்துறை உதவியுடன் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பாராட்டையும் பெற்றது. ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின், லலிதா ஜுவல்லரி உரிமையாளர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர், நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், இயக்குநர் பார்த்திபன் தான் சென்ற கல்லூரி விழாவிற்கு பத்மாவை அழைத்துச் சென்று அவருக்கு செருப்பு அணிவித்து, கிரீடம் சூட்டி பட்டம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், " தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்து கொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும் போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலக மகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
பட்டம்: என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்..." என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பத்மாவின் நேர்மைக்கு அவர் இன்னும் பல பாராட்டுகளுக்கு தகுதியானவர் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











