தாய் கிழவி டிரைலர்ல தவெக விஜய் கட்சி டயலாக்.. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இதை நோட் பண்ணீங்களா!
சென்னை: இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இன்று அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், படத்தின் டிரைலரையும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
தாய் கிழவி படம் வெளியாகும் முன்பே இயக்குநர் மீதான நம்பிக்கை காரணமாக சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படத்தை வெயிட்டிங்கில் வைத்து விட்டு சேயோன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

அமரன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பேனரில் அந்த படம் உருவாகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி டிரைலர் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..
தாய் கிழவி டிரைலர்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தாய் கிழவி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த வாரம் பிப்ரவரி 27ம் தேதி தாய் கிழவி திரையரங்குகளில் வெளியாகிறது.
என் சொத்தை நானே வச்சிக்குவேன்: தாய் கிழவி கணவர் உயிரிழந்ததும் அவரது வாரிசுகள் சொத்தில் பங்கு கேட்டு சண்டையிட, சாகுற வரைக்கும் என் சொத்தை நானே வச்சி அனுபவிப்பேன் என்கிறார். அதன் பின்னர், அவரும் படுத்த படுக்கையாகி விட, அவர் எதையோ சொல்ல வர, என்ன சொல்ல வரார் என்பதை கண்டுபிடிக்க வாரிசுகள் போராடும் கதையை நக்கலாகவும் நய்யாண்டியாகவும் சொல்லி இருக்கிறார் சிவக்குமார் முருகேசன்.
பெருசு படத்தை போல: வைபவ் மற்றும் சுனில் நடிப்பில் வெளியான பெருசு படத்தை போல இந்த படமும் இழவு வீடு மற்றும் படுத்த படுக்கையாக இருக்கும் தாய் கிழவியை சுற்றியே நகரும் என்பது தெளிவாகி விட்டது. ராதிகா சரத்குமார் பிராஸ்தெடிக் மேக்கப்புகளை போட்டுக் கொண்டு இந்த படத்தில் வயதான பாட்டியாக நடித்துள்ளார். அதிலும், அவர் பேசும் ஊர் பாஷை கெட்ட வார்த்தைகள், புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் நிறைந்துள்ளன.
தவெக வசனம்: கலைஞர் காப்பீடு, அம்மா காப்பீடு என ஏதாவது இருக்கா என மருத்துவமனையில் கேட்க, சிங்கம்புலி முதல் பால சரவணன் வரை திமுக முதல் தவெக வரை ஒவ்வொரு கட்சி பெயராக சொல்லும் காட்சியெல்லாம் ரகளையாக உள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் தவெக வசனமும் இடம்பெற்றுள்ளதே என ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து வருகின்றனர்.
பப்ளிக் விமர்சனம்: டிரைலரின் கடைசியாக படம் எப்படி இருந்தது என தாய் கிழவியிடம் பேட்டி எடுக்கும் போது கையை தலையில் வச்சுக்கிட்டு பேசு என சொல்ல அங்கேயும் அந்த நபரை திட்டும் காட்சி பக்கா. தாய் கிழவிக்கு தலையில் என்ன ஆச்சு? அவர் செத்தாரா? பிழைத்தாரா? இந்த படத்தில் சிவகுமார் முருகேசன் என்ன சொல்லப் போகிறார் என்பது வரும் 27ம் தேதி தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications