யோகேஸ்வரன் நினைவாக.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
சென்னை: ஜல்லிக்கட்டில் வெல்லும் வீரர்களுக்கு, மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்கக் காசு பரிசாக வழங்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
காணும் பொங்கல் தினத்தன்று, புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

சிறந்த வீரர்கள்
அந்தப் போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறந்த வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசு, விஜய், கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த காளைகள்
இந்நிலையில், இந்த வீரர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டுக்களைத் தெரிவித்து இருந்தார். சிறந்த காளைகளுக்கான பரிசுகளைப் பெற்ற சந்தோஷ், ஜி.ஆர்.கார்த்திக் ஆகியோருக்கும் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை, சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

யோகேஸ்வரன் நினைவு
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிகட்டு வீரர்களுக்கு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மறைந்த, யோகேஸ்வரன் நினைவாக, தங்கக் காசு வழங்க இருப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உணர்வுரீதியாக
தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன்.

மின்சாரம் தாக்கி
போராட்டத்தின் போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக, மகன் என்ற நிலையில் இருந்து நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல், யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனி ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











