விஜயகாந்த் மகனுக்கு நான் இந்த உதவியை செய்யப் போறேன்.. ராகவா லாரன்ஸ் மனசும் சொக்கத்தங்கம் தான்!
சென்னை: மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் சமீபத்தில் தனது தாயாருடன் சென்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கும் சென்று பிரேமலதா மற்றும் விஜயகாந்த் மகன்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தார். இந்நிலையில், விஜயகாந்த் மகனுக்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யப் போவதாக ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
செந்தூரப்பாண்டி படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைத்த விஜயகாந்த், பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காக நடித்துக் கொடுத்து இருந்தார். எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவாவை இரண்டாவது ஹீரோவாக நடிக்க வைத்திருந்தார். கண்ணுபட போகுதய்யா படத்தில் இடம்பெற்ற மூக்குத்தி முத்தழகு பாடலை கொரியோகிராபி செய்த ராகவா லாரன்ஸுக்கு ஊக்கம் அளித்தவர் விஜயகாந்த். இப்படி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட இளம் நடிகர்களையும் சினிமா கலைஞர்களையும் வளர்த்து விட்டவர் விஜயகாந்த். அவர் மறைந்த நிலையில், அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

உதவும் எண்ணம் கொண்டவர்: விஜயகாந்த் எப்படி பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரோ அதேபோல ராகவா லாரன்ஸும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் படிப்படியாக உயர்ந்து ஹீரோவாக மாறினார். முனி, காஞ்சனா வரிசை படங்களை இயக்கியும் நடித்தும் வசூலிலும் தனக்கான ஒரு தனி இடத்தை பெற்றுள்ளார்.
விஜயகாந்த் மறைவு: புரட்சி கலைஞர் என கொண்டாடப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது. விஜயகாந்த் மறைவின் போது வர முடியாத சிலர், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது அம்மாவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விஜயகாந்த் மகனுக்கு உதவி: சினிமாவில் எத்தனையோ பேரை கரையேற்றி விட்டவர் விஜயகாந்த். அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்கிற எண்ணம் தனக்குள் தோன்றியது என்றும் சண்முக பாண்டியன் நடித்துவரும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், யாரிடமாவது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் தானும் சண்முக பாண்டினும் அந்தப் படத்தில் நடிக்க தயார் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
படைத்தலைவன்: மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் படம் ரிலீசுக்கு தயாராகி ரொம்ப நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில், அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பாரா? அல்லது புதிய படத்தில் நடிப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











