Raghava Lawrence: அரசியல் களத்தில் ராகவா லாரன்ஸ்?.. TVKவில் இணைகிறாரா? அட அவரே சொல்றாருங்க!
சென்னை: திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், நிஜ வாழ்க்கையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவராக திகழும் நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது தனது அரசியல் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான அறிக்கை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:"கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!" "நான் அரசியலுக்கு வருவேன் என்று என் வாழ்க்கையில் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை. பணம் சம்பாதிக்கும் நோக்கமோ, அல்லது ஏதேனும் ஒரு பதவியை (Seat) அடைய வேண்டும் என்ற எண்ணமோ எனக்கு எப்போதும் இருந்ததில்லை. நான் தனி நபராகச் செய்து வரும் சமூகச் சேவைகளை விட, இன்னும் பெரிய அளவில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; அதற்கு, நான் நம்பும், எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருக்குப் பக்கபலமாக நின்று உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னிடம் இருந்தது.

நேரடி அரசியல்: ஆனால், இன்றைய சூழ்நிலையும் காலத்தின் கட்டாயமும் என்னை நேரடியாக அரசியலில் களம் காணும் புள்ளிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது." "என் இதயத்திலிருந்து பேசுகிறேன்..." மேலும், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ள வீடியோ குறித்து அவர் கூறுகையில், "அரசியல் பற்றிய எனது புரிதல் என்ன? அரசியல் எப்படி என் வாழ்க்கைக்குள் நுழைந்தது? அரசியல் குறித்து எனது தாயாரின் பார்வை என்ன? மற்றும் எனது இந்த பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான, சுவாரசியமான சம்பவங்கள் குறித்து எனது இதயத்திலிருந்து, நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அந்த வீடியோவில் பேசியுள்ளேன்.
அறிவுரை: நீங்கள் அனைவரும் இந்த வீடியோவை முழுமையாகப் பார்த்து, உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையின் இந்த மிக முக்கியமான அடிவைப்பில், உங்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், ஆசிகளும் எனக்கு மிகவும் தேவை" என்று ராகவா லாரன்ஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பரபரக்கும் அரசியல் களம்: மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் ராகவா லாரன்ஸின் இந்த திடீர் அரசியல் அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், அவரது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது இந்த போஸ்ட்டைப் பார்த்த சிலர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளார் என்று சிலரும், அண்ணாமலை தொடங்கி உள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. மேலும் பலர் லாரன்ஸ் தனி கட்சி தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.
லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா? அரசியலுக்கு வராமலே நான் இத்தனை குழந்தைகளை வளர்த்து வருகிறேன். ஒரு குழந்தையை வளர்க்கவே எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் அரசியலுக்கு வராமலே நான் மக்களுக்கு நல்லது செய்துள்ளேன். இப்படியான சூழலில் நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா என்று நீங்கள் சொல்லுங்கள். நான் உங்கள் அறிவுரைகளை எல்லாம் கேட்டுவிட்டு முடிவெடுக்கிறேன் என்று பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications