வடிவேலு அலப்பறையுடன் முடிவுக்கு வரும் சந்திரமுகி 2... நொந்து நூடுல்ஸ் ஆன பி வாசு!
சென்னை: 2005ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற வடிவேலுவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துவரும் வடிவேலு, சந்திரமுகி 2 படப்பிடிப்பில் செய்த அலப்பறையால் பி வாசு நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினி கொடுத்த நம்பிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ரஜினி ஹீரோவாக இல்லாமல் ரஜினி கேமியோ ரோலில் தான் நடித்திருப்பார். ஆனால், முதல் பாதியில் ரஜினியும் வடிவேலுவும் செய்த காமெடி கலாட்டா ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. அதேபோல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 2 வருடங்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது சந்திரமுகி.

ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்ததால், இதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் பி வாசு. இந்தப் படத்திலும் ரஜினியை நடிக்க வைக்க அவர் முயற்சி எடுத்தார். ஆனால், ரஜினி அதில் நடிக்க மறுத்ததால், அவருக்குப் பதிலாக ராகவா லாரன்ஸும், ஜோதிகாவுக்கு மாற்றாக கங்கனா ரனாவத்தும் நடித்து வருகின்றனர். ஆனால் வடிவேலு கேரக்டரில் எந்த மாற்றமும் இல்லாமல் அவரே நடித்து வருகிறார்.

ஆரம்பமே அமர்க்களம் தான்
சில வருடங்களுக்கு முன்பு 24ம் புலிகேசி படத்தில் கமிட்டான வடிவேலு, கால்ஷீட் பிரச்சினையில் ரெட் கார்டு வாங்கியதால் வீட்டுக்குள்ளே முடங்கினார். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் நடிக்க வந்தார். இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களால் படுதோல்வியடைந்தது. ஆனாலும் வடிவேலு அதனை சரியாக புரிந்துகொண்டதாக தெரியவில்லை என சந்திரமுகி 2 படக்குழுவினர் புலம்பி வருகிறார்களாம். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராமல் இழுத்தடிப்பதாக சொல்லப்பட்டது.

விரைவில் முடிவுக்கு வந்த சந்திரமுகி 2
மேலும், கால்ஷீட் முதல் சம்பளம் வரை எல்லாவற்றிலும் வடிவேலுவால் பிரச்சினை என சொல்லப்படுகிறது. அதனால் எப்படியாவது சீக்கிரமே சந்திரமுகி 2 படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்பதில் பி வாசு தீயாக வேலைப் பார்த்துள்ளார். அதன் பலனாக இப்போது சந்திரமுகி 2 ஷூட்டிங் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

காமெடியில் பஞ்சம் இருக்காது
வடிவேலு படப்பிடிப்பில் அலப்பறை செய்தது ஒருபக்கம் என்றாலும், காமெடியில் மீண்டும் வெறியாட்டம் நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வடிவேலுவின் காமெடி கலாட்டா வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகின. சமீபத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலுவும் ரொமான்ஸ் செய்வது போன்ற போஸ்டரும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோருடன் கங்கனா ராவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். பல மாதங்களாக வீட்டிலேயே இருந்தும் வடிவேலு ஏன் இன்னும் மாறவில்லை என்றே பலரும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











