ரஜினிக்காக ஹாரர் த்ரில்லர் கதை... காத்திருக்கும் ராகவா லாரன்ஸ்... மீண்டும் சந்திரமுகி ஃபார்முலாவா?
சென்னை: டான்ஸர், டான்ஸ் மாஸ்டர் என அறிமுகமான ராகவா லாரன்ஸ் தற்போது நடிகர், இயக்குநர் என கலக்கி வருகிறார்.
ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம் படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் விரைவில் காஞ்சானா 4ம் பாகத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சானா 2, காஞ்சானா 3 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
இதனைத் தொடர்ந்து உருவாகும் காஞ்சானா 4ம் பாகத்தில் ரஜினியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

விரைவில் சந்திரமுகி 2
குரூப் டான்ஸராக தனது கேரியரை தொடங்கிய ராகவா லாரன்ஸ், தற்போது கோலிவுட்டின் பிஸியான நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற படங்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் பல கோடிகளுக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டின. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கிய இந்தப் படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் ரிலீஸான இந்தப் படம் தாறுமாறாக ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2வில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ரஜினிக்கு பதிலாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரஜினிக்கு நன்றி சொல்லும்விதமாக ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தோடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சனா 4ம் பாகத்தில் தலைவர்
சந்திரமுகி 2, அதிகாரம், ருத்ரன் போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன்ஸ், மீண்டும் டைரக்ஷன் பக்கம் செல்லவிருக்கிறாராம். வழக்கம் போல தனது ஃபேவரைட்டான ஹாரர் ஸ்கிரிப்ட் காஞ்சனாவை தூசு தட்டி அதன் 4ம் பாகத்தை எடுக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிக்க வைக்கலாம் எனவும் ஸ்கெட்ச் போட்டுள்ளாராம். இதுகுறித்து அவரே ரஜினியிடம் பேசியதாக தெரிகிறது.

தலைவரின் ஆழ்ந்த சிந்தனை
ஜெயிலரில் நடித்து வரும் ரஜினி, அடுத்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோர் ரோலில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதனையடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்போதைக்கு த செ ஞானவேல், லோகேஷ் கனகராஜ்ஜின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இதனிடையே தான் ராகவா லாரன்ஸும் ரஜினியிடம் ஒரு பிட்டை போட்டு வைத்துள்ளாராம். இந்த ஸ்கிரிப்ட்டை ரஜினிக்காகவே கொஞ்சம் காமெடி, ஆக்ஷன், ஹாரர் என பக்கா கமர்சியலாக மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தலைவரும் ரொம்பவே ஆழ்ந்து யோசித்து வருகிறாராம்.

திரும்பவும் காமெடி ரூட்டுதானா?
விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் கமல். அதனால் தானும் அதேபோன்று ஒரு கேங்ஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என காத்திருக்கிறாராம் ரஜினி. ஆனால், இதுவரை அப்படியான கதை அமையவில்லை என சொல்லப்படுவதால், தனது கதைக்கு தலைவர் ஓக்கே கூறிவிடுவார் என ராகவா லாரன்ஸும் நமிக்கையோடு வெயிட்டிங்கில் உள்ளாராம். சந்திரமுகி படத்துக்குப் பிறகு காமெடி, ஹாரர் படங்கள் பக்கம் ரஜினி போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











