விசாரணைக்கு ஒத்துழைக்காத நடிகை ராகிணி.. மேலும் 5 நாட்கள் காவல்.. சென்னைக்கு அழைத்துவர திட்டம்!
சென்னை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவிவேதியை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை ராகிணி திவிவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ராகிணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்குப்பதிவு
நடிகை ராகிணியை, கடந்த 3 நாட்களாக காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சித்தாபுராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் 12 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு
இந்நிலையில் நடிகை ராகிணி திவிவேதியின் போலீஸ் காவல், நேற்றுடன் முடிவடைந்தது, இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி விசாரணையைத் தவிர்த்தாராம்.

மறந்து விட்டேன்
பின்னர் நடந்த விசாரணையில், தான் கலந்து கொண்ட பார்ட்டிகள் பற்றி தனக்குத் தெரியாது என்றாராம். அந்த விவரங்கள் மறந்து விட்டதாகவும் சொன்னாராம். இதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டனர். இதையடுத்து 5 நாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

விருந்து நிகழ்ச்சி
நடிகை ராகிணி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்குள்ள சினிமா பிரபலங்களுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அழைத்த விருந்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளதாம்.

நடிகர், நடிகைகள்
இதனால் சென்னை, ஐதராபாத்துக்கும் நடிகை ராகிணியை அழைத்து வந்து அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கும் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றியும் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கில் மேலும் சிலர், நடிகர், நடிகைகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











