ஊசின்னா எனக்கு ரொம்ப பயம் இருந்தாலும் போட்டுக்குறேன்.. ராய் லட்சுமி!
சென்னை : கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனவே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராய் லட்சுமி இப்பொழுது தனக்கு ஊசி என்றால் பயம் இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டாவது அலை
கொரோனா இரண்டாவது அலை முதல் அலையை விடவும் கோரமான முகத்தை கொண்டுள்ளது என்பதை காட்டியுள்ளது. அதன் காரணமாக எதிர்பாராத பல உயிர்ச் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஊரடங்கு, தடுப்பூசி ,சமூக இடைவெளி, கட்டாயம் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை முன்னெடுத்து நடத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.

தயக்கங்களும் சந்தேகங்களும்
இருப்பினும் இந்தியா போன்ற ஜனத்தொகை அதிகமாக உள்ள நாட்டில் கொரோனா பரவலை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கின்ற சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி அதிதீவிரமாக இந்தியா முழுதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி நல்ல பலன் அளித்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் சில தயக்கங்களும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கிறது.

திரைப் பிரபலங்கள்
இதனை போக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் நடிகர்கள் சூர்யா,ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,விக்னேஷ் சிவன், மாளவிகா மோகனன், ஆர்யா, நிவேதா தாமஸ் என பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். மேலும் தங்களது ரசிகர்களையும் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

தடுப்பூசி அவசியம்
இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். பொதுவாக எனக்கு ஊசி போடுவது என்றால் ரொம்பவும் பயம் இருப்பினும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் கொரோனா தடுப்பூசி அவசியம். எனவே நான் ஊசி போட்டுக் கொண்டு நீங்களும் தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள் என புகைப்படங்களை வெளியிட்டு ராய் லட்சுமி பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











