எங்களுக்கு மழை ஒரு பிரச்சினையே இல்ல... விஜய் மில்டன் சொல்றாரு!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிவரும் படம் மழை பிடிக்காத மனிதன்.
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்து விஜய் மில்டன் புகைப்படங்களுடன் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பான பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரையரங்குகளிலும் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விஜய் மில்டன் இயக்கம்
இந்நிலையில் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என்று சமீபத்தில் பெயரிடப்பட்டுள்ளது. நிர்மல் குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சலீம் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ரிலீஸ்
இந்தப் படத்தை விஜய் மில்டன் எழுதி இயக்கி வருகிறார். மேலும் ஒளிப்பதிவையும் அவரே மேற்கொண்டுள்ளார். படத்தை அடுத்த ஆண்டில் ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படத்தில் விஜய் ஆண்டனியுடன் சரத்குமார், ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி இசை
படத்தின் பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். பின்னணி இசையை அச்சு ராஜாமணி மேற்கொண்டுள்ளார். படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மழை பிரச்சினையே இல்லை
இந்நிலையில் தலைப்பு தான் மழை பிடிக்காத மனிதன் என்றும் தங்களுடைய டீமிற்கு மழை பிரச்சினை இல்லை என்றும் இயக்குநர் விஜய் மில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 8 நாட்களாக அடாத மழையிலும் விடாது சூட்டிங் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் மில்டன் நன்றி
மேலும் ஒத்துழைப்பு தந்துவரும் விஜய் ஆண்டனி, தனஞ்செயன், கமல் போஹ்ரா, சரத்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். சூட்டிங் ஸ்பாட்டின் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.

சிம்பு தேவன் பாராட்டு
இந்நிலையில் இந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள இயக்குநர் சிம்பு தேவன், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பட்டையை கிளப்புங்க என்றும் குறிப்பிட்டுள்ளார். மழை பிடிக்காத மனிதன் என்ற வித்தியாசமான தலைப்பில் இந்தப் படம் உருவாகிவரும் நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











