வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நடிகர்
ஹைதராபாத்:வோல்வோ காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று காம்புவுண்டு சுவரில் மோதிய நடிகர் ராஜ் தருண் யாரும் பார்ப்பதற்கு முன்பு தப்பியோடிவிட்டார்.
தெலுங்கு நடிகர் ராஜ் தருண் TS09EX1100 என்கிற பதிவு எண் கொண்ட வோல்வோ காரில் நேற்றிரவு சென்றுள்ளார். ஹைதராபாத் அல்காபூரி டவுன்ஷிப் பகுதியில் வேகமாக சென்றபோது கார் தருணின் கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் தருணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. யாரும் தன்னை பார்க்கும் முன்பு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காரை ஓட்டி வந்தது தெலுங்கு பட நடிகர் என்று அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து பார்த்தபோது காரில் யாரும் இல்லை. காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது புன்னகை தேசம், காதல் சுகமானது, எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட படங்களில் நடித்த தருண் குமார் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் காரின் பதிவு எண் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா வீடியோவை பார்த்த பிறகே அது தருண் குமார் இல்லை ராஜ் தருண் என்பது தெரிய வந்தது. விபத்துக்குள்ளான கார் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடையது. அவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
காரை படுவேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திவிட்டார் தருண் குமார் என்ற தகவல் தீயாக பரவியது. இதையடுத்து அவர் நான் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தான் இருந்தேன், எங்கும் செல்லவில்லை, விபத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ராஜ் தருண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தபோது ராஜ் தருண் குடிபோதையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











