ராஜமௌலியின் பிரமாண்ட கனவு படம் இதுதானாம்.. அவரே சொன்ன விஷயத்தை பாருங்க
சென்னை: ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. இந்த சூழலில் அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் சூழலில் ராஜமௌலி தனது பிரமாண்ட கனவு படம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட இப்படியும் ஒரு ஐடியா அவரிடம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன்போது பேசியிருந்த மணிரத்னம் பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூலை அள்ளிய பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் படங்கள் பாலிவுட்டிலும் வசூலை அள்ளலாம் என நிரூபித்த படமும் பாகுபலிதான்.
ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அது அநேகமாக மகாபாரதத்தை தழுவி எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
ராஜமௌலியின் கனவு: சூழல் இப்படி இருக்க தனது பிரமாண்ட கனவு படம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். பாகுபலி படத்தின் அனிமேஷன் வெளியீட்டில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "அனிமேஷன் படம் எடுக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதற்காகத்தான் பாகுபலி அனிமேஷன் படத்துக்கு ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். பிரமாண்டமான அனிமேஷன் படம் எடுக்க வேண்டும். இப்போது ரசிகர்கள் அப்படிப்பட்ட படங்களையும் விரும்புகிறார்கள்.
பாகுபலி 3: கண்டிப்பாக எதிர்காலத்தில் அந்த மாதிரியான படத்தை எடுப்பேன். ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தையும், பாகுபலி படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுப்பதற்கும் எனக்கு ரொம்பவே ஆசை இருக்கிறது. மகேஷ்பாபுவை வைத்து இப்போது நான் இயக்கும் படத்தை முடித்துவிட்டு பாகுபலி படத்தின் மூன்றாவது பாகத்தையும் உருவாக்குவேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











