கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பிரபல இயக்குனர் ராஜமவுலி.. பிளாஸ்மா தானம் செய்ய வெயிட்டிங்!
ஐதராபாத்: கொரோனாவில் இருந்து மீண்டு விட்ட இயக்குனர் ராஜமவுலி, பிளாஸ்மா தானம் செய்ய காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இப்போது, 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.

நடிகை ஆலியா பட்
இதில் பிரபல தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா நடிக்கின்றனர். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், சமுத்திரக்கனி, ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புகள்
கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இதன் தீவிரம் குறையவில்லை.

ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் சினிமா, அரசியல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நடிகர் விஷாலும் அவர் தந்தையும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டனர்.

கொரோனா அறிகுறி
இந்நிலையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 'எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். லேசான கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்ய உள்ளோம்' என்று ட்விட்டரில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கூறி இருந்தார்.

பிளாஸ்மா தானம்
இந்நிலையில், தனிமை முடிந்து அவர் குணமாகியுள்ளார். இதுபற்றி, 'இரண்டு வாரத் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டேன். எந்த அறிகுறிகளும் இல்லை. எங்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடீஸ் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா என்பதைப் பார்க்க, மருத்துவர் 3 வாரங்கள் காத்திருக்குமாறு கூறியுள்ளார்' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











