உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வாரணாசி படத்தின் கதை இதுதான்.. ராஜமௌலி செய்யப் போகும் தரமான சம்பவம்
சென்னை: 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' என இந்திய சினிமாவை உலக அரங்கில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'வாரணாசி'. இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ சர்வதேச ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது ராஜமௌலி பகிர்ந்துள்ள புதிய தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பேசிய ராஜமௌலி, "'வாரணாசி' வெறும் ஆக்ஷன் அட்வென்ச்சர் படம் மட்டுமல்ல. இந்தப் படத்தின் உண்மையான உயிர் தந்தை - மகன் உறவுதான்" என்று கூறியுள்ளார். இதுவரை ஹாலிவுட் தரத்திலான சாகசக் காட்சிகள், பிரம்மாண்ட விஷுவல்ஸ், உலக நாடுகளைச் சுற்றிய பயணம் ஆகியவைதான் படத்தின் ஹைலைட் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த தகவல் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே ஒரு சாகச பயணம்: இதுகுறித்து மேலும் பேசிய ராஜமௌலி, "ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப் பிரதேசங்கள், இயற்கை பேரிடர்கள், ராமாயண இதிகாசத்தின் கூறுகள், தெய்வீக பின்னணி, பேண்டஸி உலகம் என அனைத்தும் இந்தப் படத்தில் இடம்பெறும். ஆனால் இவை அனைத்தையும் இணைத்து ரசிகர்களின் மனதை தொடப்போவது குடும்ப உறவுகளின் உணர்வுதான்" என்று தெரிவித்துள்ளார்.

ராமாயணமம் டச்.. ஆனால் புராண படம் இல்லை: ஏற்கனவே இப்படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத், ராமாயணத்தில் இடம்பெறும் சில இதிகாசக் கூறுகள் படத்தில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது ராஜமௌலியும் அதையே உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இது முழுக்க முழுக்க புராணக் கதையாக இல்லாமல், நவீன உலகத்தை அடிப்படையாகக் கொண்ட சாகச திரைப்படமாக உருவாகி வருவதாக கூறியுள்ளார்.
மகேஷ் பாபுவின் தந்தை யார்?: படத்தின் மையக் கதையே தந்தை - மகன் உறவைச் சுற்றி நகரும் என்று ராஜமௌலி தெரிவித்ததை அடுத்து, மகேஷ் பாபுவின் தந்தையாக யார் நடிக்கிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானதால், அவர்தான் அந்த வேடத்தில் இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும், 'ருத்ரன்' மற்றும் 'ஸ்ரீராமர்' ஆகிய கதாபாத்திரங்களில் அவர் வருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
ராஜமௌலி சென்டிமென்ட் மறுபடியும் வொர்க் அவுட் ஆகுமா?: 'பாகுபலி'யில் அமரேந்திர பாகுபலி - சிவகாமி உறவு, 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நட்பின் உணர்வு என பிரம்மாண்ட காட்சிகளுக்கு நடுவே எப்போதும் வலுவான எமோஷனை வைத்து வெற்றி கண்டவர் ராஜமௌலி. அதேபோல் இந்த முறையும் தந்தை - மகன் உறவை மையமாக வைத்து உலகளாவிய சாகசக் கதையை சொல்லப் போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே படத்தின் முக்கிய ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், 2026 அக்டோபருக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்திய சினிமாவின் அடுத்த மிகப்பெரிய விஷுவல் விருந்தாக 'வாரணாசி' உருவாகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications