இயக்குனர் ராஜமவுலி படத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினும் விலகலா? வேகவேகமாக மறுக்கும் ஆர்ஆர்ஆர் டீம்!
ஐதராபாத்: ராஜமவுலி படத்தில் இருந்து மீண்டும் ஒரு நடிகை விலக இருப்பதாக வந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது.
ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.
பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஹாலிவுட் நடிகர்
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி. ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். மேலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆலியா பட்
பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் நடந்துவந்தது. இருந்தும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. இதையடுத்து படத்தின் ஷூட்டிங்குக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், ராம் சரண் தேஜா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவர், ராஜமவுலிக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்து இருந்ததாகக் கூறப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல்
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மொத்த திட்டத்தையும் சிதறடித்து விட்டதாகக் கூறப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரலில்தான் முக்கியமான காட்சிகளை படமாக்க இருந்தாராம் ராஜமவுலி. இதற்கிடையே நடிகை ஆலியா பட், பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின், கங்குபாய் கதியவாடி என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் நடக்க இருந்தது. இதை முடித்துவிட்டு, ராஜமவுலி படத்தில், ஏப்ரல் மாதம் நடிக்க இருந்தார்.

விலக இருப்பதாக
கொரோனாவால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், ராஜமவுலி படத்தில் இருந்து அவர் விலகப் போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஏற்கனவே, ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் ஆலியா பட்-டும் விலக இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

படக்குழு மறுப்பு
இதற்கிடையே இந்த தகவலை ஆர்ஆர்ஆர் படக்குழு மறுத்துள்ளது. ஆலியா பட் நடிக்கவில்லை என்ற தகவல் தவறானது. அவர் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்வார். இந்தப் படத்தில் நடிக்க அவர் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கும். அவர் சீதா என்ற கேரக்டரில் ராம்சரண் ஜோடியாக நடிக்கிறார் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











