ஆஸ்கர் விருது வாங்க பணம் கொடுத்தோமா?.. விளக்கம் அளித்த ராஜமௌலி தரப்பு
ஹைதராபாத்: 80 கோடி ரூபாய்வரை செலவழித்துதான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வாங்கியதாக தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து ராஜமௌலியின் மகன் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் போராட்டத்தையும், இருவருக்கும் இடையே இருந்த நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது ஆர்ஆர்ஆர்.

பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திலும் பல பிரமாண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 1000 கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து ஏகப்பட்ட காட்சிகள் எடுக்கபட்டிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் ராஜமௌலியால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் காட்சிகள் எடுக்க முடிகிறது என வியந்தனர். பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

கெத்து காட்டிய நாட்டு நாட்டு பாடல்
படத்துக்கு ராஜமௌலியின் உறவினரான எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசை ரசிகர்களை தாளம் போட வைக்க; படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை செம ஆட்டம் போட வைத்தது. நடனத்தில் சிறந்து விளங்கும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் வெறித்தனமாக நடனம் ஆடியிருப்பார்கள். இதையடுத்து உலகம் முழுவதும் சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை பலரும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸாக வெளியிட்டனர்.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்
உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட நாட்டு நாட்டு பாடல் முதலில் கோல்டன் குளோப் விருதை வென்றது. அதனைத் தொடர்ந்து சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கரில் நாமினேஷன் ஆனது. சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இதனை இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர்.

நாட்டு நாட்டு பாடல் விருது பெற பணம் கொடுக்கப்பட்டதா?
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வெல்லும் முதல் இந்திய பாடல் நாட்டு நாட்டு பாடலாகும். இதனையடுத்து பலரும் வாழ்த்து தெரிவிக்க ஒரு தரப்பினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். மேலும், ஆஸ்கருக்கு தகுதியான பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன ஆனால் இந்தப் பாடலுக்கு எப்படி ஆஸ்கர் கொடுத்தனர் என கேள்வி எழுப்பிய அவர்கள், பணம் கொடுத்துதான் ஆஸ்கர் விருதை வென்றிருப்பார்கள் எனவும் கூறினர். அதுமட்டுமின்றி 80 கோடி ரூபாய்வரை ஆஸ்கருக்காக ராஜமௌலி செலவழித்தார் எனவும் பேசப்பட்டது.

ராஜமௌலி மகன் அளித்த விளக்கம்
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆஸ்கர் விருதுக்காக ஆர் ஆர் ஆர் படத்தை பரப்புரை செய்வதற்கு மட்டும்தான் 8.5 கோடி ரூபாய் செலவு செய்தோம். அதிலும் நாங்கள் முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் செலவு அதிகமாகிவிட்டது.

95 வருட பழமையான விருதை எப்படி வாங்க முடியும்?
ஆஸ்கரை பணம் கொடுத்து வாங்கலாம் என்பதே ஒரு நகைச்சுவை. ஏனெனில் அது 95 வருடங்களாக கொடுக்கப்பட்டுவரும் விருது. ரசிகர்களின் அன்பை மட்டும்தான் வாங்கலாம். அதேசமயம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும், ஜேம்ஸ் கேமரூனும் ஆர்ஆர்ஆர் படம் குறித்து சொல்லியதை விலை கொடுத்து வாங்க முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











