நான் ஒரு தமிழன், தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்: கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரண்
சென்னை: தமிழக மக்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே எப்படியோ தனக்கும் அவர் அப்படி தான் என்று கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல்ஸ் உரிமையாளர் சுபாஷ்கரண் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்து வரும் கத்தி படத்திற்கு பிரச்சனையே அதை லைகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளரான சுபாஷ்கரண் தயாரிப்பது தான். அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டதால் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து சுபாஷ்கரண் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழர்கள்
ஐரோப்பா மற்றும் தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு என்னை நன்கு தெரியும். என் அம்மா ஞானம் அவர்களின் பெயரில் அறக்கட்டளை துவங்கி நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியுள்ளேன்.

ஞானம் புரொடெக்ஷன்ஸ்
என்னுடைய தயாரிப்பு நிறுவனம் ஞானம் புரொடெக்ஷன்ஸ் என்ற பெயரில் தான் இருந்தது. ஆனால் லைகா என்ற பெயரில் பல தொழில்கள் துவங்கினேன். அதனால் அனைத்திற்கும் ஒரே பெயராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து லைகா புரொடக்ஷன்ஸ் என்று பெயர் மாற்றினேன்.

ராஜபக்சே
ராஜபக்சேவுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தமிழக மக்களுக்கு அவர் எப்படியோ எனக்கும் அவர் அப்படியே.

பண உதவி
கத்தி படத்தை தயாரிக்க ராஜபக்சே பணம் அளித்ததாக கூறப்படுகிறது. கத்தி படத்தின் மொத்த தயாரிப்பு செலவு என்னுடைய 2 நாள் வருமானம். எனது போட்டியாளர்கள் தான் பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளனர்.

கத்தி
கத்தி படத்தை எதிர்ப்பவர்கள் சுயவிளம்பரத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள். இது குறித்து யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். ஒரு நாளும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.

நான் தமிழன்
நான் ஒரு தமிழன். அதனால் தமிழ் படங்களை தயாரிக்க விரும்பினேன். தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி படங்களை தயாரிப்பேன்.

படம்
வரும் 18ம் தேதி நடக்கும் கத்தி இசை வெளியீட்டு விழாவுக்கு உங்களின் ஆதரவு தேவை. படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என்றார் சுபாஷ்கரண்.


Click it and Unblock the Notifications











