For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினி 40... அடையாளமில்லாமல் நுழைந்து இந்திய சினிமாவின் அடையாளமாய் மாறியவரின் கதை இது!

  By Shankar
  |

  சூப்பர் ஸ்டார்...

  1978-க்கு முன்பு வரை இப்படி ஒரு வார்த்தை இந்திய சினிமாவில் பயன்படுத்தப்பட்டதில்லை. உலக சினிமா எதிலும் எந்த பெரிய நடிகருக்கும் இப்படி ஒரு அடைமொழியும் கொடுக்கப்பட்டதுமில்லை.

  சிலர் தியாகராஜ பாகவதர், ராஜேஷ் கன்னாவையெல்லாம் சொல்லக் கூடும். அவர்களை சூப்பர் ஸ்டார்கள் என அழைக்க ஆரம்பித்ததே தொன்னூறுகளுக்குப் பிறகுதான். அவர்கள் கோலோச்சிய காலங்களில் பாகவதர் ஏழிசை மன்னர் என்றுதான் அழைக்கப்பட்டார். ராஜேஷ் கன்னா இந்தியின் நம்பர் ஒன் நடிகர் என்றே அழைக்கப்பட்டார். இது சினிமா வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.

  Rajini 40: How an ordinary man becomes the Icon of Indian Cinema?

  சினிமா வரலாற்றில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட முதல் நடிகர் ரஜினிகாந்த். அதுவும் 1975-லிருந்து வில்லனாக, துணை நாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர், முதல் முறையாக பைரவியில் நாயகனாக நடிக்கிறார். அந்த முதல் படத்திலேயே அவரை சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

  அந்த சூப்பர் ஸ்டார் திரையுலகில் தடம் பதித்து இன்றோடு நாற்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன.

  1975-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 18-ம் தேதிதான் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற 24 வயது இளைஞர், ரஜினிகாந்த் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

  அந்த வித்தியாசமான உடல் மொழி, வாய் மொழி காரணமாக அவரை தமிழ் ரசிகர்களுக்கு சட்டென்று பிடித்துப் போனது. அடுத்த படம் மூன்று முடிச்சு. அவர்தான் வில்லன் கம் கதாநாயகன். இதெப்டி இருக்கு? என்ற அந்த ஒற்றை பஞ்ச்... தமிழ் திரையுலகையே புரட்டிப் போட்டது.

  ஆரம்ப நாட்களில் ரஜினி ஒரு மொழியோடு நிற்கவில்லை. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் சமமாகவே நடித்து வந்தார். வெற்றியும் கண்டார். 1977-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் அவர் நடித்தவை 15 படங்கள். 1978-ல் 20 படங்கள். 1979-ல் 13 படங்கள்!

  மூன்றே ஆண்டுகளில் 43 படங்கள்! இரவு பகல் தூக்கமின்றி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 21 மணி நேரம் நடித்துக் கொண்டே இருந்தார்.

  ஆனால் ஒரு கட்டத்தில் தமிழில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தார். எண்பதுகளுக்குப் பிறகு சராசரியாக ஆண்டுக்கு எட்டுப் படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்தவர், 1983-ல் இந்தியில் அந்தாகானூன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்திப் படங்களில் வெற்றிகரமான தென்னிந்திய ஹீரோவாக வலம் வந்தார்.

  1987-க்குப் பிறகு ஆண்டுக்கு நான்கைந்து படங்களாகக் குறைத்துக் கொண்டார்.

  1990-லிருந்து ஆண்டுக்கு மூன்று படங்களாகக் குறைத்தவர், 1993-க்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு படம் என்று அறிவித்தேவிட்டார்.

  2000- ஆண்டுக்குப் பிறகு இந்தியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் (புலந்தி) ரஜினி.

  தமிழில் அவர் நடிக்கும் படங்களே தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகி பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில் சிவாஜி த பாஸ் பெரும் சாதனைப் படைத்தது வட மாநிலங்களில். கிபி 2000 தொடங்கி இந்த 2015 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் ரஜினி வெறும் 7 படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். பாபா, சந்திரமுகி, சிவாஜி த பாஸ், குசேலன், எந்திரன், கோச்சடையான், லிங்கா என ஏழு படங்கள்தான்.

  ஆனால் இந்தப் படங்கள்தான் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை உலகளவிய எல்லைக்குள் இட்டுச் சென்றன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூரைத் தாண்டாத இந்திய சினிமாக்கள் இன்று ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வட தென் அமெரிக்க கண்டங்கள், ஐரோப்பா, சீனா என வலம் வரக் காரணம், ரஜினியின் பாட்ஷாவும், முத்துவும் படையப்பாவும், சந்திரமுகியும், சிவாஜியும்தான். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரஜினியின் எந்திரன், சிவாஜி, லிங்கா வசூல்தான் இன்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீசில் முதலிடத்தில் உள்ளன.

  வெற்றிப் படங்கள் என்பதைத் தாண்டி, சினிமாவில் ரஜினி ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளமானவை. ஒரு கூலித் தொழிலாளி, முன்னாள் பஸ் கண்டக்டர், சினிமாவுக்கான அழகியல் ஏதுமற்ற மனிதன் கூட மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் ரஜினி.

  வயது வித்தியாசம் தாண்டி அனைத்து மட்டங்களிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது ரஜினி செய்த இன்னொரு மாயாஜாலம். அதற்கு காரணம், சினிமாவின் போக்கை உணர்ந்து அதற்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் அவரது தன்மை.

  இன்றைய சினிமா ஹீரோக்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் நிச்சயம் ரஜினியின் தாக்கம் இருக்கும். இன்று முன்னணி ஹீரோக்களாக உள்ள அஜீத்தும் விஜய்யும் தங்களை ரஜினியின் ரசிகர்களாக முன்னிறுத்தி வந்தவர்கள்தான்.

  பலருக்கும் தெரியாத ஒரு உண்மை... விஜயகாந்தே ரஜினியின் ரசிகர் மன்ற செயலாளராக இருந்து, விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு திரைக்கு வந்தவர்தான்.

  இந்த நாற்பது ஆண்டுகளில் 37 ஆண்டுகள் ரஜினிகாந்த் அசைக்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டாராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் எத்தனையோ ஹீரோக்கள் ஏற்ற இறக்கங்கள் கண்டாலும், இவர் மட்டும் அதே முதலிடத்தில் வீற்றிருக்கிறார்.

  ரஜினி தோல்வியே கண்டதில்லையா?

  கண்டிருக்கிறார். ஆனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு அந்த தோல்வி குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?

  "ரஜினியின் தோல்விப் பட வசூலில் நான்கில் ஒரு பங்கைக் கூட, மற்ற பெரிய வெற்றிப் படங்கள் வசூலாகப் பெற்றதில்லை.. இதை இத்தனை காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் ரஜினியின் திரையுலக ஆளுமை. அவர் படங்களால் யாரும் நஷ்டமடைந்ததில்லை. நஷ்டமடையவும் ரஜினி விட்டதில்லை. நஷ்டம் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்!"

  English summary
  Rajini, the Superstar of Indian Cinema for the 4 decades completed his 40 years in Film Industry today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X