Rajini: “வரலாறு முக்கியம் தலைவரே.." காலில் விழுந்த ரஜினி... துவைத்து எடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இந்தப் படம் வெளியாகும் ஒருநாள் முன்பே இமயமலைக்கு சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், நேற்று உபி சென்ற ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
இதனை குறிப்பிட்டு "ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம்" என ரஜினியை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

வரலாறு முக்கியம் தலைவரே: ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய இந்தப் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அண்ணாத்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெயிலர் வெளியானதால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். மேலும், முதல் நாள் முதலே ஜெயிலர் படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
இதனால், ரஜினியின் ஜெயிலர் இதுவரை 450 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமர்சன ரீதியாகவும் வசூல் அளவிலும் ரஜினிக்கு ஜெயிலர் மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இருந்த ஜெயிலர் ஃபீவரை, ஒரேநாளில் சோலி முடித்துவிட்டார் ரஜினி. ஜெயிலர் ரிலீஸ் நேரத்தில் இமயமலை சென்றிருந்த ரஜினி, தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ளார்.
நேற்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினி, அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார். அதனைத் தொடர்ந்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படம் பார்க்கவிருந்தார். ஆனால், அம்மாநில துணை முதலமைச்சர் கேஷ்வ் பிரசாத் மவுரியா மட்டுமே ரஜினியுடன் ஜெயிலர் படம் பார்த்தார். அப்போதும் கூட அவர் பாதியிலேயே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படம் வெளியான பின்னர் ரஜினி இப்படி நடந்துகொண்டது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் ரஜினிக்கு எதிரான ட்ரோல்களும் மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சும்மாவே ரஜினியை கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது இன்னும் உக்கிரமாக சம்பவம் செய்து வருகிறார். சமீபத்தில் தான் ரஜினியுடன் நடந்த மீட்டிங் வீடியோவை வெளியிடுவேன் என பகிரங்கமாக கூறியிருந்தார்.
இதனையடுத்து தற்போது ரஜினி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வீடியோ, போட்டோக்களை தனது டிவிட்டரில் ஷேர் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். மேலும், "உங்கள் புகழுக்கும் உயரத்திற்கும் இந்த சறுக்கல்கள் தேவையா ரஜினிகாந்த்.? ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல" என மிக காட்டமாக விமர்சித்துள்ளார். ரஜினியை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்தால், ரசிகர்கள் சண்டைக்கு வருவது வழக்கம்.
ஆனால், ரஜினி - யோகி ஆதித்யநாத் சம்பவம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்வதை ரசிகர்கள், நெட்டிசன்கள் உட்பட பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











