கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்
சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சனிடம் போனில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.
Recommended Video
மும்பையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
இதைக் கட்டுப்படுத்த மகாராஷ்ட்ர மாநில அரசும் மும்பை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடிகர் அமிதாப் பச்சன்
பிரபல நடிகை ரேகாவின் வீட்டு செக்யூரிட்டிக்கு நேற்று முன் தினம் கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது பரபரப்பாகி இருந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது.

கொரோனா பரிசோதனை
இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத் தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் அமிதாப்பச்சன் நேற்று வெளியிட்டிருந்தார். அதில், கடந்த 10 நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருமே கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்து வருகின்றனர்.

மருத்துவர்களை நம்புகிறேன்
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விரைவில் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வருவார்கள் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு பச்சன்களுமே விரைவில் பூரண நலம் பெற்று விடு திரும்ப வேண்டும். இந்திய மருத்துவர்களை நம்புகிறேன், உடல் உபாதைகளை வென்று சீனியர் பச்சன் மீண்டு வருவார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்
இதற்கிடையே அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த், அவரிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்திருக்கிறார். அப்போது அவருடைய உடல்நலம், மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டறிந்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் உடல் நிலை முன்னேறி வருவதாகவே மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் லேசான கொரோனா அறிகுறி மட்டுமே உள்ளதாகவும், யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என மும்பை சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











