Rajini Dhanush: வேட்டையனுக்குப் போட்டியாக ராயன்... மீண்டும் ரஜினியை டார்கெட் செய்த தனுஷ்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. த.செ.ஞானவேல் இயக்கும் இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வேட்டையனுக்குப் போட்டியாக தனுஷின் 50வது படமான D 50 ஏப்ரல் ரிலீஸுக்கு ரெடியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்டையனுக்குப் போட்டியாக ராயன்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திராவின் கடப்பா பகுதியில் வேட்டையன் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஹைதராபாத்தில் தொடங்கிய வேட்டையன் படப்பிடிப்பு இந்த ஷெட்யூலோடு முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து வேட்டையன் படத்தை ஏப்ரலில் வெளியிட இயக்குநர் த.செ.ஞான்வேல் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில், வேட்டையனுக்குப் போட்டியாக தனுஷின் 50வது படமும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள டி 50 படத்தை தனுஷே இயக்கியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆனாலும், இதுகுறித்து D 50 படக்குழு இன்னும் அபிஸியலாக அறிவிக்கவில்லை. அதேநேரம் D 50 படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நிறைவு பெற்றுவிட்டதாம். இதனையடுத்து D 50 டைட்டில், தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க தனுஷ் ரெடியாகிவிட்டார்.
அதன்படி இந்தப் படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸுக்கு நாள் குறித்துள்ளதாம். ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகவிருந்த லால் சலாம் படத்துக்குப் போட்டியாக கேப்டன் மில்லர் ரிலீஸை அறிவித்தார் தனுஷ். இதனால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய லால் சலாம், வரும் 9ம் தேதி தான் வெளியாகிறது.
இப்போது அதே ரூட்டில் வேட்டையன் ரிலீஸாகும் அதே தேதியில் ராயன் படமும் வெளியாகவுள்ளதாம். இதுபற்றி இரண்டு படக்குழுவினரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். இல்லையென்றால் இந்த போட்டியை தவிர்க்க ரஜினி அல்லது தனுஷ் ஏதேனும் முடிவு எடுப்பார்களா என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











