vettaiyan audio launch: ரஜினியை பாத்தே ஆகணும்.. போலி டிக்கெட்டுடன் நுழைந்த இளைஞர்களால் பரபரப்பு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா திருவிழாப்போல கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஒட்டுமொத்த ரசிகர்களும் குவிந்துள்ளதால், அவர்களை பார்க்க சில இளைஞர்கள் போலி டிக்கெட்டுடன் அரங்கத்திற்குள் நுழைந்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் இறுதியாக வெளியான ஜெயிலர் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

வேட்டையன்: அந்த வகையில் 'வேட்டையன்' திரைப்படத்திற்கும் சிறந்த பாடலையும், பின்னணி இசையையும் அனிருத் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அந்த நம்பிக்கையை அனிருத் காப்பாற்றி விட்டார். மனசிலாயோ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பிவருகிறது. அதில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக புகழ்பெற்ற மலேசியா வாசுதேவனின் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓடிடி உரிமை: 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வேட்டையன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகவும், ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி மாஸ் என்ட்ரி: இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, அனிருத், ரக்ஷன் என பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்கான வந்த ரஜினிகாந்த், மிகவும் எளிமையாக கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் மட்டுமில்லாமல் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், சுபாஸ்கரன் என மூன்று பேருமே கருப்பு உடையில் வந்திருந்தனர். கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவில், அனிருத் பாட்டுப்பாடி அசத்தி வரும் நிலையில் நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இணைந்து நடனமாடி நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி வருகின்றனர்.
போலி டிக்கெட்: இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் சில இளைஞர்கள் போலி டிக்கெட்டுடன் நுழைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேட்டையன் இசைவெளியீட்டு விழாவை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில், போலி டிக்கெட்டுகளை காட்டி பலர் அரங்கத்திற்குள் சென்றதாக புகார் எழுந்துள்ளது. போலி டிக்கெட்டுடன் நுழைந்தவர்களால் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு பூட்டு போடப்பட்ட நிலையில், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











