லிங்கா லாபத்தில் ஒரு பங்கு ரஜினி அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட்டுக்கு!
லிங்கா படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை, தன் தந்தைக்கு சமமாகக் கருதும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாட்டுக்கு தருமாறு கூறியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி.
நட்புக்கும் நன்றிக்கும் மறுபெயர் ரஜினி என்றால் மிகையல்ல. தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் என்பதற்காகவே கே.பாலசந்தருக்கு ஏராளமான படங்கள் செய்து கொடுத்தார்.

பாலச்சந்தருக்காக
அதுவும் அவர் சூப்பர் ஸ்டாரான பிறகு வெளியான ஏராளமான வெற்றிப் படங்களில் பல கே பாலச்சந்தருக்காக ரஜினி நடித்தவைதான்.
தில்லுமுல்லு, நெற்றிக் கண், புதுக்கவிதை, சிவா, வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, குசேலன் என பல படங்களில் நடித்துக்கொடுத்தார் ரஜினி. குசேலனில் விநியோகஸ்தர்கள் பிரச்சினை செய்தபோது, குருவுக்காக தன் சொந்தப் பணத்திலிருந்து 3.5 கோடி கொடுத்து தீர்த்து வைத்தார்.

எஸ்பி முத்துராமனுக்காக..
தன்னுடைய சென்னை அண்ணன் என்று ரஜினியே வர்ணிக்கும் எஸ்பி முத்துராமனுக்காக 'பாண்டியன்' என்ற படம் நடித்தார். இந்தப் படத்துக்காக அவர் பணம் ஏதும் வாங்கவில்லை.

விகே ராமசாமிக்காக...
மறைந்த வி.கே.ராமசாமி மற்றும் பண்டரிபாய்க்காக 'அருணாச்சலம்' படத்தில் நடித்தார். லாபத்தை பகிர்ந்து தந்தார்.

நண்பர்களுக்காக
பழைய நண்பர்களுக்காக 'வள்ளி', 'படையப்பா' என இரு படங்களில் நடித்து, பலருக்கும் வாழ்க்கை தந்தார்.

சிவாஜிக்காக
சிவாஜி கணேசன் குடும்பம் பெரும் பிரச்சினையில் இருந்த நேரத்தில், அவர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்ததுதான் சந்திரமுகி.

மகளுக்காக
இப்போது தன் இளைய மகளுக்காக 'கோச்சடையான்' நடித்துக் கொடுத்துவிட்டார். வரும் மே 23-ல் அந்தப் படம் வெளியாகிறது. சில சிக்கல்கள் இருந்தாலும், படம் நல்ல லாபம் தரும் என நம்புகிறார்கள்.

அண்ணனுக்காக
அடுத்து, இன்னும் கூட பெங்களூரில் சாதாரண வீட்டில் நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் சத்தியநாராயணா கெய்க்வாடுக்கும் உதவ முடிவு செய்துள்ளார்.
ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வரும் தனது அடுத்த படமான 'லிங்கா'வில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை அண்ணன், சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டுக்குத் தருமாறு கூறியுள்ளாராம்.

மறுக்கவில்லை
இதற்கு முன் பல முறை ரஜினி உதவ முன்வந்தும், அப்போதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று மறுத்து வந்த சத்தியநாராயணா கெய்க்வாடும், இந்த முறை மறுப்பேதும் சொல்லவில்லையாம், தம்பியின் அன்பு வேண்டுகோளுக்கு!

ரஜினியின் தந்தைக்கு நிகரானவர்...
உடன் பிறந்த அண்ணன் என்றாலும், சத்யநாயணா கெய்க்வாடை தன் தந்தைக்கு நிகராகவும், அவர் மனைவியை தன் தாயினும் மேலாகவும் மதிப்பவர் ரஜினி. பல மேடைகளில் தன் அண்ணனும், அண்ணியும் தன்னை வளர்த்த விதத்தை சொல்லி கண்கலங்குவார் ரஜினி. ஆனால் அப்பேர்ப்பட்ட இருவருக்கும் தன்னால் உதவ முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு வந்தார். இப்போது அந்த ஆதங்கம் தீர்ந்துள்ளது.

நாச்சிக்குப்பம்
ரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி நாச்சிக் குப்பத்தில் பல்வேறு நலப் பணிகள் செய்ய தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார் சத்தியநாராயணராவ்.


Click it and Unblock the Notifications











