ரஜினி, கமல் பங்கேற்கும் நடிகர் சங்கப் பொதுக்குழு... பிரச்சினை வெடிக்குமா?
சென்னை: நடிகர் சங்க கணக்கு வெளியிடாத விவகாரம், நடிகர் சங்கக் கட்டட வழக்கு என பல பிரச்சினைகள் நடிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையின் இன்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது.
சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது.
கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ரஜினி, கமல்
ரஜினி, விஜயகாந்த், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த முறை தவறாமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் வரவு- செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும், நீதிமன்ற வழக்கு விவரங்கள் பற்றியும் சங்க நிர்வாகிகள் பேசி விளக்கம் அளிக்கிறார்கள்.

குமரி முத்து
நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சங்க உறுப்பினர்கள் பலர் நடிகர் சங்கத்துக்கு மனுக்கள் அனுப்பி உள்ளனர். அந்த மனுக்களும் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட குமரிமுத்துவும் கூட்டத்துக்கு வருவதாக அறிவித்திருப்பதால் சின்ன பரபரப்பு கிளம்பியுள்ளது.

நாசர்
நடிகர் நாசர் தலைமையில் அதிருப்தி நடிகர்கள் பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் தயாராகி வருகிறார்கள்.

விஷால்
இன்னொரு பக்கம் விஷால் உள்ளிட்ட இளம் நடிகர்கள், சங்கத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று கூறி எதிர்ப்பை வெளிப்படையாகப் பதிவு செய்யப் போவதாகக் கூறியுள்ளனர்.
இந்த பரபரப்புகளால் பொதுக்குழு கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











