Rajini: ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லால் சலாம் ட்ரெய்லர், தலைவர் 170 டைட்டில் ரெடி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது.
அதேநேரம் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 படங்களில் இருந்து மாஸ் அப்டேட் வெளியாகவுள்ளதாம்.

ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான ரஜினி, லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல், தசெ ஞானவேல் இயக்கிய தலைவர் 170 படத்திலும் நடித்து வருகிறார்.
அதன்படி, லால் சலாம், தலைவர் 170 என 2 படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லால் சலாம் ஷூட்டிங் முடிந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனையடுத்து லால் சலாம் பட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமெடுத்துள்ளன. முன்னதாக இந்தப் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இதன் தொடர்ச்சியாக லால் சலாம் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது.
இதனை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே லால் சலாம் இசை வெளியீட்டு விழாவை ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு நடத்த லைகா நிறுவனம் பிளான் செய்து வருகிறதாம். அதேபோல், தலைவர் 170 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவையும் ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் தலைவர் 170ல் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு வேட்டையன் என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு சம்மருக்கு தலைவர் 170 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போது டைட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே ரஜினியின் தலைவர் 171 படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியும் லோகேஷ் கனகராஜ்ஜும் முதன்முறையாக இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தலைவர் 171 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகிவிட்டாலும், அதன் பின்னர் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளில் தலைவர் 171 படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











