அதிரவைக்கும் ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள்
ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் விதிமுறைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கூட்டத்தை கூட்டி, அரசியலுக்கு நிச்சயம் வருகிறேன். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறோம் என தடாலடியாக அறிவித்து ஒட்டுமொத்த ஊடகங்களையும் தன் பக்கம் திருப்பினார்.

ரஜினி ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக பெயர்மாற்றம் செய்து மக்களை இணைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இப்போது, மக்கள் மன்றத்தின் நிர்வாகத்திற்காக விதிகளை உருவாக்கி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒருவருக்கு மக்கள் மன்ற நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது.
இளைஞர் அணியில் கண்டிப்பாக 35 வயதுக்குட்பட்டோர் மட்டுமே இருக்க வேண்டும். நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்கள் வாகனங்களில் நிரந்தரமாக கொடியை வைக்கக் கூடாது. மன்ற நிகழ்ச்சிகளின் போது கொடியை வைத்துவிட்டு நிகழ்ச்சி முடிந்த உடன் அகற்றிவிட வேண்டும். மன்ற பொறுப்புகள், நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது என பல விதிமுறைகள் அப்புத்தகத்தில் உள்ளன.
ரஜினிகாந்த் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, முழுநேரமாக அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக அரசியல் என்றால் ஒழுக்கமான அரசியல் எனச் சொன்ன ரஜினிகாந்த், மன்றத்தின் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதில் இருந்து அவருடைய கட்சியில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications











